சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் இன்று (07.1.2025) நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அபோது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சர்வதேச, ஆசிய மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 1,021 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை காசோலைகளை அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள் மத்தியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “விளையாட்டு எவ்வளவு சக்தி வாய்ந்தது, மரியாதைக்குரியது என்பதற்கு இங்கே ஒரு சிறிய எடுத்துக்காட்டை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 1975ஆம் ஆண்டு காலகட்டத்தில், உலகின் மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரராக திகழ்ந்தவர் பிலே. அப்போதையே அமெரிக்க அதிபர் ஜெராட் போர்ட், பீலேவை சிறப்பு விருந்தினராக அவரை கௌரவப்படுத்துவதற்காக வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் சிறப்பு செல்கின்றார். அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றி நான் குறிப்பிட விரும்புகின்றேன்.
ஜெராட் போர்ட் - பீலேவும் பேசிக் கொண்டிருக்கும் போது, அங்கு இருக்கக்கூடிய ஒரு சிறுவன் ஒரு ஆட்டோகிராப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு அவர்களை நோக்கி வேகமாக ஓடி வருகின்றான். அவன் தன்னுடைய கையில் இருந்த ஆட்டோகிராப் புத்தகத்தை அமெரிக்க அதிபர் போர்ட்டிடம் நீட்டுவான் என்று அங்கு இருந்த அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், அந்த சிறுவன் ஆட்டோகிராப் புத்தகத்தை கால்பந்தாட்ட வீரர் பீலேவிடம் நீட்டினான். இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள்.
வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவுடைய அதிபரின் ஆட்டோகிராபை விட, பிரேசிலில் வறுமையான குடும்பத்தில் பிறந்து ஒரு கால்பந்து வாங்கக் கூட காசு இல்லாத நிலையில் விளையாடத் தொடங்கி, கால்பந்து என்றாலே பிலே தான் என சொல்லும் அளவுக்கு உயர்ந்த பீலேவின் கையெழுத்து தான் அந்த சிறுவனுக்கு பெரியதாக இருந்தது. அது தான் விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் சிறப்பு. உங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய அந்த புகழ், அந்த மாதிரியான சிறப்பை தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பெற வேண்டும் என்று நாங்கள் முயற்சிக்கின்றோம். அந்த லட்சியத்தை நோக்கி நீங்கள் உழைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். விளையாட்டைப் பொறுத்தவரை, உங்களுக்கு எல்லா வகையிலும் உதவ முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், திராவிட மாடல் அரசும் என்றென்றும் தயாராக இருக்கின்றது” எனத் தெரிவித்தார்.