கோவையை அடுத்த இடையர் பாளையம் பகுதியில் மாநகராட்சியினர் கழிவுநீர் கால்வாய் அமைக்காததால் பொதுமக்களே பணம் திரட்டி கழிவுநீர் கால்வாய் அமைத்து அந்த சூழலில் அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவையை அடுத்த இடையர் பாளையம் பகுதியில் மருதம் ராஜலட்சுமி குடியிருப்போர் நலச்சங்கம் உள்ளது. இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்புகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டி அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சியிடம் பல முறை முறையிட்டு உள்ளனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் இங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க அரசாணை வெளியிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது . இதனால், அப்பகுதி பொதுமக்களே பணம் திரட்டி வீடுகளுக்கு வெளியே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பொதுமக்களே கால்வாய் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கழிவுநீர் கால்வாய் அமைக்க கூடாது என கூறி பொதுமக்களுடன் அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்த பாரதிய ஜனதா கட்சியினர் அதிகாரிகளுடன் பேசி கழிவுநீர் கால்வாயை அமைக்க அனுமதி பெற்றனர். பிறகு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. மாநகராட்சி செய்து தர வேண்டிய பணிகளை பொதுமக்களே செய்தாலும் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.