![Mother shocked by daughter's confession .. Youth arrested under Pocso Act ..!](http://image.nakkheeran.in/cdn/farfuture/QY9RGbLSCbZ4WvoZl1AOh_DXs-5Z0Dq8p7XmUUCDU8Q/1609938594/sites/default/files/inline-images/cop_32.jpg)
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ளது திருவக்கரை. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் (40). இவர், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சுந்தரத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அந்தப் பெண்ணின் மகள் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சுந்தரம், அடிக்கடி தனது பெண் சினேகிதி வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். அப்போது, பெண் சினேகிதி இல்லாத நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த அந்தச் சிறுமியிடம் அத்துமீறி நடந்துவந்துள்ளார். இதனால், அந்தச் சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
அச்சிறுமியை அவரது தாயார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அந்தச் சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அந்தச் சிறுமியிடம் அவரது தாயார் விசாரித்தபோது, ஆட்டோ டிரைவர் சுந்தரம், வீட்டிற்கு வரும்போதெல்லாம் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த அந்தப் பெண், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுந்தரம் மீது புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சுந்தரத்தை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் சிறையில் அடைத்துள்ளார்.