Skip to main content

விபத்தில் தாய், தந்தையை பறிகொடுத்த சிறுவன்; அம்மாவை கேட்டு அடம்! பரிதவித்த 108 ஆம்புலன்ஸ் செவிலியர்!!

Published on 01/09/2018 | Edited on 01/09/2018
es


சேலத்தில் நள்ளிரவில் நடந்த தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தாய், தந்தை, தாத்தா, பாட்டி ஆகியோரை பறிகொடுத்த இரண்டரை வயது சிறுவன் அம்மாவை கேட்டு அடம் பிடித்து கதறி அழுதது காண்போரை உருக வைத்தது. 


சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும், பெங்களூரில் இருந்து சேலம் வழியாக கொச்சின் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தும் சேலம் குரங்குசாவடி அருகே நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணித்தவர்களில் இரண்டு பெண்கள் உள்பட 7 பேர் பலியாயினர். 38 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

ee


நள்ளிரவில் பேருந்துகள் மோதிக் கொண்டதில் தனியார் ஆம்னி பேருந்து தலைகுப்புற சர்வீஸ் சாலையில் கவிழ்ந்தது. விபத்தினால் ஏற்பட்ட பயங்கர சத்தத்தைக் கேட்ட அந்தப் பகுதி குடியிருப்புவாசிகள், நெடுஞ்சாலையோர கடைக்காரர்கள் சம்பவ இடத்தில் கூடினர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.


தலைகுப்புற கவிழ்ந்த ஆம்னி பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள்ளே இருந்த பயணிகள் வந்தனர். பொதுமக்களும், போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணிகள் துரித கதியில் நடந்து கொண்டிருந்தன. காயம் அடைந்தவர்களில் 21 பேர் உடனடியாக கருப்பூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 17 பேர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.


இந்த களேபரத்திற்கு இடையே சர்வீஸ் சாலை ஓரமாக சிவப்பு சட்டை, ஜீன்ஸ் பேண்ட் அணிந்த இரண்டரை வயது சிறுவன் மண் தரையில் அமர்ந்தபடி வீறிட்டு அழுது கொண்டிருந்தான். அம்மா..... அம்மா..... என அழுது கொண்டிருந்த சிறுவனை அங்கிருந்த பொதுமக்கள் தூக்க முயன்றபோது அவன் யாரிடமும் செல்ல மறுத்ததோடு, மீண்டும் கதறி அழுதான்.


அங்கே மீட்பு பணிக்காக வந்த அரசு மருத்துவமனை 108 ஆம்புலன்ஸ் செவிலியர் கவிதாவிடம், யாரோ ஒருவருடைய குழந்தை இங்கே அழுது கொண்டிருக்கிறது என்று தகவல் அளித்தனர். அதையடுத்து அந்தக் குழந்தையை மீட்ட கவிதா, கருப்பூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்குச் சென்று, அங்கே சிகிச்சையில் இருக்கும் ஆட்களிடம் குழந்தையைக் காட்டி யாருடைய குழந்தை என்று விசாரித்தார். அங்கிருந்தவர்கள் அது தங்களுடைய குழந்தை இல்லை என்றும், யாருடைய குழந்தை என்றும் தெரியாது எனவும் பதில் கூறியுள்ளனர். 

 

de3


இதையடுத்து செவிலியர் கவிதா அந்தக் குழந்தையை தூக்கிக்கொண்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரிடமும் விசாரித்தார். அப்போதும் அந்தக் குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க முடியவில்லை. நீண்ட நேரமாக அவர் போராடியும் குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க முடியாமல் தவித்தார். இதையடுத்து போலீசார் மற்றும் அரசு மருத்துவமனை ஏஆர்எம்ஓ வினோத் ஆகியோர் அந்தக் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்தனர். முன்னதாக குழந்தைக்கு பிஸ்கட் வாங்கிக் கொடுத்தனர். நீண்டநேரமாக அழுததால் பசியால் தவித்த அந்தச் சிறுவன் பிஸ்கட்டை ருசித்து சாப்பிட்டான்.


பின்னர் அரசு மருத்துவமனை செவிலியர்கள் அந்தக் குழந்தையிடம் மெதுவாக பேச்சுக்கொடுத்தபோது தன்னுடைய பெயர் ஈத்தன் என்று மழலை மொழியில் சொன்னது அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது. அப்பா, அம்மாவின் பெயரை அந்தச் சிறுவனால் சரியாக உச்சரிக்க முடியவில்லை. இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் சிறுவன் ஈத்தன் ஒப்படைக்கப்பட்டான்.


இந்நிலையில் போலீசார் விசாரணையில் அந்தக் குழந்தையின் தந்தை சிஜி வின்சென்ட், தாய் பீனுமேரி வின்சென்ட் மற்றும் தாத்தா, பாட்டி ஆகிய நான்கு பேரும் இந்த விபத்தில் பலியாகி இருப்பது தெரிய வந்தது. எனினும் தாத்தா, பாட்டியின் பெயர் விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. கேரளாவைச் சேர்ந்த அவர்கள் பெங்களூரில் இருந்து கொச்சின் திரும்பும்போது இந்த விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தும் சிறுவன் மட்டும் காயங்கள் இன்றி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்