20க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது சையத் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னை புரசைவாக்கம் மில்லர் சாலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் 26 வயதான முகமது சையத். இவர் மீது மூன்று இளம் பெண்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்திருந்தனர். ஒரே நேரத்தில் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி பாலியல் இச்சைக்காகப் பயன்படுத்திக் கொண்ட முகமது சையது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மூன்று பெண்களும் போலீசாரிடம் புகார் அளித்திருந்தனர். காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் வேப்பேரி மகளிர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு கடந்த மார்ச் மாதம் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட மூன்று பெண்களின் செல்போனிலிருந்து முகமது சையதுக்கு குறுஞ்செய்திகள் பறந்தன. போலீசார் அனுப்பிய குறுஞ்செய்தி என அறியாத முகமது 'ஐ லவ் யூ' என குறுஞ்செய்தி அனுப்பியதோடு மூன்று பேரிடமும் வெவ்வேறு இடங்களில் சந்திக்க வருவதாக தெரிவித்தான். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், முகமதுடன் பழகிக்கொண்டிருந்த காலத்தில் மூன்று பெண்களில் ஒரு பெண் எதேச்சையாக முகமதின் மொபைல்போனை எடுத்துப் பார்த்தபோது வாட்ஸப்பில் நிறையப் பெண்களுக்கு காதல் வலை வீசும் வகையில் மெசேஜ்கள் அனுப்பப்பட்டிருந்தது கண்டு அதிர்ந்துள்ளார்.
அதிலிருந்த மற்ற பெண்களின் செல்போன் எண்களை எடுத்து விசாரித்தபோது ஒரே நேரத்தில் பல பெண்களிடம் முகமது காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தது தெரியவந்தது. கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட முகமது சையத் விசாரணையில் முதலில் இதனை மறுத்த நிலையில் போலீசாரின் தீவிர விசாரணைக்குப் பிறகு 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் காதலிப்பதாக கூறி இவ்வாறு பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி கொண்டதை ஒப்புக்கொண்டான். முகமது சையது செல்போனில் அழிக்கப்பட்ட ஆவணங்களை மீட்டெடுக்க சைபர்கிரைமுக்கு அவனது செல்போன்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல் அவன் பயன்படுத்தி வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்த சம்பவத்தில் முகமது சையதால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து புகாரை பெறுவது, வாக்குமூலம் பெறுவது உள்ளிட்ட பணிகளில் போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். மேலும் பல பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டது தெரியவந்த நிலையில் ஒரு வருடம் சிறையிலிருந்து வெளியே வரமுடியாத அளவிற்கு முகமது சையத் மீது குண்டர் சட்டம் போட சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.