வடமாநிலங்களில் இருந்து உளுந்தம் பருப்பு வரத்து சரிந்துள்ளதால், தமிழகத்தில் மூட்டைக்கு 4000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இந்தியாவில், குறிப்பாக தென்னிந்திய சமையலில் முக்கிய அங்கம் வகிக்கும் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவை கடந்த பத்து நாள்களுக்கு முன்பு மூட்டைக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து இருந்தது.
உளுந்து பயிரிடுவதில் தென்னிந்தியாவைக் காட்டிலும் மஹாராஷ்டிரா, குஜராஜ், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களே முன்னணியில் இருக்கின்றன. தென்னகத்தில் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் சீர்காழி, தஞ்சை உள்ளிட்ட குறிப்பிட்ட சில பகுதிகளில் உளுந்து அதிகளவில் பயிரிடப்படுகின்றன.
வட மாநிலங்களில், வடகிழக்கு பருவமழை அதிகரித்துள்ளதால், உளுந்து பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் நடப்பு ஆண்டில் உளுந்து விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால், தென்னிந்தியாவுக்கு வரத்தும் குறைந்துள்ளது.
இதையடுத்து உளுந்தம் பருப்பு விலை மூட்டைக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை 'கிடுகிடு'வென உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை உளுந்து 9 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது 13 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது ஒரு கிலோ உளுந்து, 90 ரூபாயில் இருந்து 130 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம்வாக்கில் புது உளுந்தம் பருப்பு வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை இப்போதுள்ள விலையே நீடிக்கும் என்று சேலம் செவ்வாய்ப்பேட்டை மொத்த மளிகை வியாபாரிகள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டு சமையலில் இட்லி, தோசை ஆகியவை முக்கிய உணவுப்பொருளாக உள்ளது. உளுந்தை முக்கியப் பொருளாகக் கொண்டு பலகாரங்களும் தயாரிக்கப்படுகின்றன. தொடர் விலையேற்றம் காரணமாக, இனி இட்லி, தோசை உள்ளிட்ட பண்டங்களின் விலையும் கணிசமாக உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.