Skip to main content

மேகதாட்டு அணை!  ஊடகங்களுக்கு  கர்நாடக அரசு  வீசும் வலை! 

Published on 22/01/2019 | Edited on 22/01/2019
megatatu


 

காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணைக் கட்டும் தங்களின் நிலைப்பாட்டிற்கு ஊடகங்களிடம் ஆதரவு திரட்டும் முயற்சியில் குதித்துள்ளது கர்நாடக அரசு. இதற்காக, கர்நாடக அமைச்சர் சிவக்குமார் தலைமையில் மிகப் பெரிய அதிகாரிகள் படையே டெல்லியில் முகமிட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக,  மேகதாட்டு அணையைக் கட்டுவதற்கான வரைவு அறிக்கைத் தயாரிக்கும் பணிக்கு மத்திய அரசின் அனுமதியை சமீபத்தில் பெற்றது கர்நாடக அரசு. இது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது என தமிழக அரசியல் கட்சிகள், விவசாய சங்கத்தினர் என பல்வேறு தரப்பினரும் கண்டன குரல் எழுப்பினர்.  தமிழக அரசும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது. 


இப்படிப்பட்ட சூழலில், 
இந்தியா முழுவதுமுள்ள தேசிய ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் ஆதரவை திரட்டும் முகமாக டெல்லியில் முகாமிட்டு பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகத்தை அணுகி வருகிறார்கள் கர்நாடக அதிகாரிகள். இதன் ஒரு கட்டமாக, தேசிய ஊடகங்களின் செய்தியாளர்களை மேகதாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளனர். அப்போது, அணை கட்டுவதன் மூலம்தான் கர்நாடக விவசாயப் பகுதிகளைக் காப்பாற்ற முடியும் என்றும், அணைக் கட்டுவதால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் செய்தியாளர்களுக்கு மூளைச் சலவை செய்ய களமிறங்கியிருக்கிறது அமைச்சர் சிவக்குமாரின் குழு. 


அனைத்து உயர்தர வசதிகளுடன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்து, தனி விமானப் பயணம், விலை உயர்ந்தப் பரிசுப் பொருட்கள் என மிகப்பெரிய வலையுடன் தேசிய செய்தியாளர்களை அழைத்துச் செல்லும் பயணத்திட்டத்தை வகுத்துள்ளதாக டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்