கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, வழிப்பறி மற்றும் திருட்டு தொடர்பாக இருவேறு தாதா குருப்புக்கு இடையேயான முன்விரோதத்தில் தாதா ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வழக்கமான கோஷ்டி மோதல் என்றாலும், இக்கொலைக்கு ஆதரவாக, சில போலீசார் மற்றொரு தரப்பினை காட்டிக் கொடுத்துள்ளனர் என்பது தான் தற்பொழுதைய பிரச்சனையே..!!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ஒச்சதேவன் கோட்டை கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் நேதாஜி கொம்பூதி கிராமத்திலுள்ள சீமைக்கருவேலம் காட்டிற்குள் நேற்றிரவு (27-02-2020 ) கைகள் துண்டான நிலையில், முகம் மற்றும் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். தகவலறிந்த கமுதி காவல்துறை துணைச்சரகத்திற்குற்பட்ட கோவிலாங்குளம் போலீசார், மாவட்ட எஸ்.பி (பொறுப்பு) ராஜராஜன் ஆகியோர் சம்பவ இடத்தினை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினர்.
"சாயல்குடி காவல் சரகத்திற்குட்பட்ட மறவர் கரிசல்குளத்தை சேர்ந்த பழனிநாதன், கோவிலாங்குளம் காவல்சரகம் ஒச்சாத்தேவன் கோட்டையை சேர்ந்த சண்முகநாதன் ஆகிய இருவரும் இணைந்து கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி உள்ளிட்ட பல குற்றங்களை செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக குஜிலியம்பாறை, தேவக்கோட்டை, சாயல்குடி, கடலாடி, கமுதி உள்ளிட்ட பல காவல்நிலையங்களிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கொள்ளையடித்த சம்பவம் ஒன்றில் பணம் பிரிப்பது சம்பந்தமாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தனித்தனி கோஷ்டியாக தொழில் செய்து வந்தனர். எனினும், இரு கோஷ்டிக்குமிடையே அடிக்கடி மோதல் நடைப்பெறும், இதனின் தொடர்ச்சியாக சமீபத்தில் சண்முகநாதன் கோஷ்டியால் ஒச்சத்தேவன்கோட்டையில் பழனிநாதன் சிறைப்பிடிக்கப்பட்டு கட்டிவைத்து உதைக்கப்பட்டுள்ளார். அதனின் தொடர்ச்சியாக பழிவாங்கும் நடவடிக்கையாக சண்முகநாதனின் தம்பி நேதாஜி கொலைச்செய்யப்பட்டுள்ளார்." என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவர, மேற்கொண்டு எவ்வித சம்பவமும் நடைப்பெறக்கூடாது என்பதற்காக இருதரப்பையும் தேடிவருகின்றது காவல்துறை.
இதேவேளையில், " கடலாடி, சாயல்குடி மற்றும் கோவிலாங்குளம் காவல்நிலையங்களை சேர்ந்த சில போலீசாரே இவர்கள் இருதரப்பையும் தூண்டிவிட்டு பயனடைந்ததாகவும், தற்பொழுது கூட நடந்த நேதாஜி கொலையில் பழனிநாதனுக்கு தகவல் கூறியதே சில போலீசார் தான்.! இப்பொழுது கூட பழனிநாதன் மற்றும் சண்முகநாதனின் செல்போன் தொடர்புகளை ஆராய்ந்தாலே போதும்.. யார் அந்த போலீசார் என்று தெரிந்துவிடும். ஆதாயப் போலீசாரின் ஆடுபுலி ஆட்டத்தில் பழனிநாதன் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்றதும் குறிப்பிடத்தக்கதே.!" என்கின்றனர் நேர்மையான போலீசார். நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட எஸ்.பி..?