நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில், சங்க காலத்தில் புகழ்பெற்ற கடையெழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும், கொடையையும் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஆடி மாதம் 17, 18 தேதிகளில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடமும் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நடைபெறுவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் வல்வில் ஓரி மன்னனின் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த இரு வேறு அமைப்புகள் இடையே மோதல் ஏற்பட்டதால் அந்தப் பகுதியே கலவரக் காடக காட்சி அளித்தது. இரு தரப்பினரும் கற்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். வாகனங்களை அடித்து நொறுக்கினர். வண்டிப்பேட்டை ரவுண்டானாவில் ஏற்பட்ட மோதலின் கலவர காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த மோதலைத் தொடர்ந்து சேந்தமங்கலத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.