புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குழு அமைத்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள இறையூர் கிராமத்தில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில், குற்றவாளிகளைக் கண்டறிய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இறையூரில் அக்குழு தங்களது முதற்கட்ட விசாரணையைத் துவக்கியுள்ளது. ஏடிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையில் இரண்டு டிஎஸ்பி-க்கள், நான்கு காவல் ஆய்வாளர்கள் மற்றும் நான்கு உதவி காவல் ஆய்வாளர்கள் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இவ்விவகாரத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க 11 பேர் கொண்ட குழுவை அமைத்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.