மேற்கு வங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே, கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு தொழிலதிபரான ஹிரானந்தனியிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். மொய்த்ராவின் கேள்விகள் அனைத்தும் ஹிரானந்தனியின் நலனுக்காகத்தான் இருந்திருக்கிறது.
இதற்காக 2 கோடி பணம் மற்றும் விலை உயர்ந்த ஐ ஃபோன் போன்ற பரிசுப் பொருட்களை ஹிரானந்தனியின் நிறுவனம் மொய்த்ராவுக்கு தந்துள்ளது. அது மட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ. 75 லட்சம் மொய்த்ராவுக்கு, ஹிரானந்தனி நிறுவனம் கொடுத்துள்ளது. கடந்த 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மொய்த்ரா நாடாளுமன்றத்தில் 61 கேள்விகள் கேட்டுள்ளார். அதில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனிக்கு சாதகமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளது. எனவே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, பா.ஜ.க எம்.பி. வைத்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்திருந்தார். அதே சமயம் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற நன்னடத்தைக் குழு விசாரணை நடத்தி இருந்து. இந்த நன்னடத்தைக் குழுவில் இடம்பெற்றிருந்த10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி இருந்தனர். மேலும் நன்னடத்தை குழுவின் இந்த பரிந்துரை அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களவையில் மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவி நீக்கம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளியேறிய நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எம்.பி. பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “ரிஷிகாந்த் துபே துவங்கி ரமேஷ் பிதுரி வரை ஆளுங்கட்சி எம்பிக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நெறிமுறைக்குழுவில் கொடுக்கப்பட்ட புகார்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் எதிர் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா மீது கொடுக்கப்பட்ட புகாரை விசாரனைக்கு எடுத்துக்கொண்டு அவரது எம்.பி. பதவியை பறித்ததன் மூலம் மற்றுமொரு அநீதியை அரங்கேற்றியிருக்கிறது மோடியின் அரசு. வன்மையான கண்டனம்” எனப் பதிவிட்டுள்ளார்.