
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. டி.டி.கே. சாலையில் அமைந்துள்ள அரங்கு ஒன்றில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இந்தியாவின் ஏற்றுமதியில் தென்மண்டலம் முக்கிய பங்காற்றுகிறது. தமிழ்நாட்டின் தனித்தன்மையான தஞ்சாவூர் ஓவியங்கள், கோவில்பட்டி கடலை மிட்டாய்கள், சேலம் பட்டு, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, பழனி பஞ்சாமிர்தம் என 48 பொருட்களுக்கு புவிசார் குறியீடு உள்ளது. கம்பம் பன்னீர் திராட்சை, சேலம் ஜவ்வரிசி உள்ளிட்ட 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்து பரிசீலனையில் உள்ளன. இந்தப் பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால் ஏற்றுமதியாளர்கள் நல்ல பயன்பெற முடியும். தமிழகத்தில் தற்போது இருக்கும் திறனையும் வளத்தையும் வைத்து பார்க்கும்போது ஏற்றுமதியில் இன்னும் பல மடங்கு நாம் வளரமுடியும்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய முதல்வர், தமிழகம் 2030க்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதார மாநிலமாக மாறவேண்டும் என தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.