உள்ளாட்சி தேர்தலில் சீட் ஒதுக்கீடு விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தியால், "ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது" என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டார். இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து திமுக தலைமையை சமாதானப்படுத்தும் வகையில் மீண்டும் அழகிரி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
இருந்தபோதிலும், பாஜகவின் தேசிய குடியுரிமை சட்டத்துக்கும், குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கும் எதிராக சோனியா தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டு ஆலோசனைக் கூட்டத்தை திமுக புறக்கணித்தது. இதற்கிடையில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் எங்களுக்கு என்ன நஷ்டம்?, அவர்களுக்கு ஓட்டே இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம், வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் இந்த ஞானம் ஏன் வரவில்லை? என கேள்வியெழுப்பினார்.
இப்படி திமுக-காங்கிரஸ் இடையே புகைமூட்டம் கிளம்பியுள்ள நிலையில், அண்ணா அறிவாலயத்தில் இன்று மதியம் 12 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திக்கிறார். இந்த சந்திப்பிற்கு கே.எஸ்.அழகிரியுடன் கே.வீ.தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி ஆகியோரும் செல்கின்றனர்.