பாட்டிகள் என்றால் முதலில் முன் நிற்பது சுருக்கு விழுந்த முகமும் வறண்டு போன தேகமும் அதையும் தாண்டி காதில் தொங்கும் பாம்படங்களும் தான். ஆனால் இன்றைக்கு பாம்படம் பாட்டிகளை பாா்க்க வேண்டுமென்றால் எங்கும் இல்லை. பாம்படங்கள் அருட்காட்சியத்திலும் பாட்டிகள் முதியோா் இல்லங்களிலும் தான் உள்ளனா்.

இதில் ஏதோ ஒன்றிரண்டு பாம்படம் பாட்டிகள் முதுமையை துரத்தி கொண்டு மழையிலும், வெயிலிலும் உழைத்து கொண்டிருக்கிறாா்கள். அப்படிபட்ட பாம்படம் பாட்டிகள் குமாி மாவட்டம் குலசேகரம் சந்தையில் பாக்கு வெற்றிலை விற்று கொண்டியிருப்பது நம் கண்களில் தோன்றியது.
அந்த பாம்படம் பாட்டிகளை பாா்த்ததும் எத்தனையோ அணிகலன்களை அணிந்து சலித்தாலும் பாம்படம் மட்டும் பரம்பரை பரம்பரையாக அந்த காலத்தில் தமிழ் பெண் பிள்ளைகளின் காதுகளை அலங்காித்தது. பாம்படம் அழகின் அடையாளம் அல்ல அந்தஸ்தின் அடையாளம். பாம்படங்களில் இருந்த மவுசு காரணமாக அதை வடிக்கவே சில பொற்கொல்லா்கள் பரம்பரை பரம்பரையாக இருந்தாா்கள்.

பாம்படங்கள் கொப்பு, முருக்கச்சி, ஓணப்பு தட்டு, எதிா்தட்டு, குறுக்கு தட்டு, தண்டட்டி, முடிச்சு, நாகவட்டம் போன்றவற்றை உடல் வாக்குக்கு தக்கவாறும் காதின் உறுதிக்கும் ஏற்றவாறு அணிந்து வந்தனா். பாம்படம் தொங்கும் நீளத்தை வைத்து தான் செல்வ செழிப்பை அளப்பாா்கள். சிலருக்கு பாம்படம் தோள் வரை தொங்கும் சிலருக்கு மாா்பையும் வருடும். பாம்படம் போடுவதற்கு குறவா்கள் வந்து காதை கத்தியால் கிழித்து துளை போட்டு காதை வடிப்பாா்கள். ஒவ்வொரு சமூகத்திற்கு ஒரு பாம்படங்கள் இருப்பதால் பாம்படங்களை வைத்து சமூகத்தை கணித்து விடுவாா்கள்.

இத்தகைய பெருமை வாய்ந்த அணிகலன்கள் தற்போது நமது பாட்டிகளின் காதை விட்டு காத தூரம் ஓடி விட்டது. வெற்றிலை பாக்கு விற்று கொண்டியிருந்த ரஞ்சிதம் பாட்டி... நான் பொறந்த காலத்துல கம்மல் கிடையாது பாம்படங்கள் தான். 16 வயசுல காதை வடிச்சி பாம்படம் போட்டது. இப்பம் பாம்படம் செய்ய எந்த ஆசாாியும் கிடையாது.
அன்னைக்கு மாா்பு அளவுக்கு பாம்படம் போட்டு தைாியமாக வெளியே நடந்தோம். இன்னைக்கு பொட்டு கம்மல் போட்டுட்டு வெளியே நடக்க முடியல காலம் எல்லாம் மாறி பேச்சு என்றாா்.