Skip to main content

இலங்கை தமிழர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர்!

Published on 29/06/2021 | Edited on 29/06/2021

 

Minister who provided relief aid to Sri Lankan Tamils

 

திருச்சியில் இன்று (29.06.2021) சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வுசெய்தார். திருச்சி துவாக்குடி பகுதியில் உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமினை ஆய்வு செய்துவிட்டு, திருச்சி நகர பகுதிக்குள் உள்ள கொட்டப்பட்டு அகதிகள் முகாமினைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமில் அல்லாமல் வெளியில் காவல்துறையில் பதிவுசெய்து வாழும் இலங்கைத் தமிழர் குடும்பத்திற்கு கரோனா கால நிவாரண நிதி ரூபாய் 4,000 வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கரோனா கால நிவாரண உதவிகளை வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி திருச்சி சிவா, மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், “தமிழகத்தில் மொத்தம் 108 அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் வசித்துவரும் குடும்பங்களின் அடிப்படைத் தேவைகள், கல்வி, குடியுரிமை தொடர்பான ஆய்வுகளை திருச்சியிலிருந்து துவக்கியுள்ளோம். மேலும் இதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

 

15 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு தலா 4 ஆயிரம் வீதம் மொத்தம் 5.12 கோடி மதிப்பிலான நிவாரண உதவித் தொகை மற்றும் பொருட்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களின் விடுதலை குறித்த நடவடிக்கைக்கு முதலமைச்சரோடு கலந்து ஆலோசிக்கப்படும். முகாம்களில் வசித்துவரக்கூடிய இலங்கைத் தமிழர்களின் செல்ஃபோன்கள் குற்றப் பின்னணியில் ஈடுபடுவதால் அதற்கான நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியபோது, குற்றம் யார் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்