உதவி இயக்குநர் காந்தி தற்கொலை விவகாரத்தில் சின்னத்திரை நடிகை நிலானி தலைமறைவாக உள்ளார். நிலானியின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. அவரை கே.கே.நகர் போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த 15ஆம் தேதி மயிலாப்பூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார் நிலானி. அந்தப் புகாரில், தன்னிடம் பழகிய காந்தியை நண்பராக மட்டுமே கருதினேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். மேலும் தான் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு தளத்திற்கும் வந்து தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார்.
புகாரைப் பெற்ற போலீசார், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி கே.கே.நகரில் காந்தி தீக்குளித்தார். இதனையடுத்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் காந்தியின் உடல் திருவண்ணாமலையைச் சேர்ந்த அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
காந்தி உயிரிழந்தவுடனேயே, நிலானியும் காந்தியும் கணவன் மனைவியாக வாழ்ந்ததாக குறிப்பிட்ட காந்தியின் உறவினர்கள், அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டனர்.
வீடியோக்களிலும், புகைப்படங்களிலும் காந்தியும், நிலானியும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளனர். அவை அனைத்தும் படுக்கை வசதி கொண்ட ஆம்னி சொகுசுப் பேருந்தில் எடுக்கப்பட்டதாகும்.
அதில் ஒரு வீடியோவில் காந்தி லலித்குமாருடன் உல்லாசமாக இருக்கும் போது காந்தியின் கால்மேல் தனது காலை வைத்து நிலானி மெட்டியை காட்டும் போட்டோவும் உள்ளது. வீடியோவும் உள்ளது.
மேலும் வீடியோவில் பேசியிருக்கும் காந்தி, தனக்கும் நிலானிக்கும் திருமணமான நாள் செப்டம்பர் 4ஆம் தேதி என குறிப்பிட்டுள்ளார்.
காந்தியை பொறுத்தவரை நண்பராகத்தான் பழகினேன் என்று நிலானி கூறியுள்ளார். இருப்பினும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் இருவரும் நெருக்கமாக இருப்பதுபோன்று உள்ளதால் நிலானியை விசாரிக்க முடிவு செய்துள்ளனர் போலீசார்.
வளசரவாக்கத்தில் உள்ள நிலானியின் வீட்டிற்கு பலமுறை போலீசார் சென்று பார்த்தனர். ஆனால் அவர் அங்கு இல்லை. அவரது செல்போன் எண்ணும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. நிலானியை விசாரித்தால்தான் அனைத்து விவரங்களும் தெரிய வரும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.