ராஜபாளையம்- கணபதி சுந்தரநாச்சியார்புரத்தில் இசக்கிமுத்து என்ற இளைஞர் மண்வெட்டி பிடித்து விவசாய நிலத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார். ‘விவசாயம் உன்னதமான தொழில்தானே! பார்ப்பதில் தவறொன்றுமில்லையே!’என்றுதான் நினைக்கத் தோன்றும். அவரைப் பொறுத்தமட்டிலும், குடும்ப வறுமையின் காரணமாகவே விவசாய வேலை பார்க்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. முதுமை அடைந்துவிட்ட பெற்றோரை நல்லமுறையில் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு தனக்கிருப்பதால், அரசு வேலை கேட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியரையும், தென்காசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரையும், ராஜபாளையம் எம்.எல்.ஏ.வையும் சந்தித்து மனு அளித்திருக்கிறார்.
இசக்கிமுத்து அரசு வேலை கேட்டால் கொடுத்து விடுவார்களா? அப்படி என்ன தகுதி அவருக்கு இருக்கிறது?
இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர், உடற்கல்வி ஆசிரியர் கல்வி முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த ஆண்டு பூடானில் நடைபெற்ற தெற்காசிய கிராமப்புற விளையாட்டுக்களில் தமிழகத்தின் பிரதிநியாகவும், இந்திய கபடி அணிக்கு தலைமைப் பொறுப்பேற்றும் போட்டிகளில் விளையாடி தங்கப்பதக்கம் வென்று தேசத்திற்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்தார்.
அந்தக் குடும்பத்தில் இசக்கிமுத்துதான் முதல் பட்டதாரி. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர், வேலையின்மையால் ஏற்பட்ட வறுமையின் காரணமாக உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தான் தள்ளப்பட்டிருப்பதாகவும் அரசு சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பினை அளித்தால், தாய் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அரியலூரில் உடற்கல்வி ஆசிரியர் கல்வி பயிலும் இசக்கிமுத்து, அங்கு படிக்கும் நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் லாரிகளில் மரம் ஏற்றும் ‘லோடுமேன்’வேலை பார்த்து வருகிறார். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சொந்த கிராமமான கணபதி நாச்சியார்புரத்துக்கு வந்து, அங்கும் விவசாயக் கூலியாக வயல்காட்டில் இறங்கிவிடுகிறார்.
நம்மிடம் இசக்கிமுத்து “நானும் அம்மா, அப்பாவும் மூன்று நேரமும் சாப்பிடுவதற்கே செலவுக்குப் பணமில்லாமல் போராட வேண்டியதிருக்கிறது. இதில், படிப்புச் செலவு வேறு. கூலி வேலை பார்த்தால்தான் சாப்பிட முடியும். படிக்கவும் முடியும். குடும்பக் கஷ்டத்தை உணர்ந்து, நேரம் கிடைக்கும் போதெல்லாம் எந்த வேலை கிடைத்தாலும் செய்கிறேன். உண்மையைச் சொல்வதென்றால், வாழ்வா? சாவா? போராட்டம்தான் நடக்கிறது. அந்த வேதனையில்தான், உயிரை விடுவேன் என்று மனுவில் எழுதிவிட்டேன். கை, கால்தான் இருக்கிறதே. உழைக்கவும் தெம்பிருக்கிறது.சாகவெல்லாம் மாட்டேன்.” என்றார் உறுதியுடன்.
விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தனக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார் இசக்கிமுத்து!