திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர்கள் பற்றியும், பெண் பத்திரிகையாளர்களையும் மிகவும் அவதூறாக விமர்சித்து பதிவிட்டது தமிழ்நாடு முழுக்க பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எழுத்தாளரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன் நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,
எஸ்.வி.சேகர் அவரைப் பற்றி அல்லது பாஜகவைப் பற்றி இழிவாக ஒரு பார்வேடு மெசேஜ் வந்தால் அதனை படிக்காமல் ஷேர் பண்ணுவாரா? இன்னொன்று அவர் ஷேர் செய்யவில்லை. ஸ்கீரின் ஷாட் எடுத்து தேசிய கொடி போன்றவைகளை சேர்த்து நின்று நிதானமாக பதிவை வெளியிட்டிருக்கிறார். அதற்கான ஆதாரத்தையும் என்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறேன்.
திட்டமிட்டு எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்கள் இந்த வெறுப்பு பேச்சுக்களை பரப்பி வருகிறார்கள். அதற்கு முக்கியமான காரணம், தாங்கள் தொடர்ந்து ஊடகங்களில் டிரெண்டிங்கில் இருக்க வேண்டும் என்பததற்காக, எல்லோரும் தங்கள் கட்சியைப் பற்றியோ அல்லது தங்களைப் பற்றியோ பேச வேண்டும் என்பதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
எஸ்.வி.சேகர் எழுதப்படிக்கத் தெரியாத நபர் அல்ல. தெளிவாக ஸ்கீரின் ஷாட் எடுத்துத்தான் போட்டியிருக்கிறார். இன்னொன்று அவர் செய்த குற்றத்தை அவர் உடனடியாக மறைக்க முயற்சிப்பதினால், அவர் செய்த குற்றம் என்ன என்பதை காட்டுவதற்காக பலரும் அதனை முகநூலில் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதாவது இவர் குற்றம் செய்தது தவறில்லையாம். அந்த குற்றத்தை சுட்டிக்காட்டினால் அது தவறாம்.
ஆகவே அவர் சொல்வதெல்லாம் மிகப்பெரிய பொய்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இன்றைக்கு வருத்தம் தெரிவிப்பார். நாளைக்கு இதைவிட மோசமான ஒன்றை, ஏதாவது ஒரு எதிர்க்கட்சியை நோக்கியோ அல்லது ஒரு மாற்று சிந்தனைகளை நோக்கியோ அல்லது தமிழகத்தில் போராடக்கூடிய இளைஞர்களைப் பற்றியோ கூறுவார். அப்படிப்பார்க்கிறபோது அவருடைய இந்த மன்னிப்பு என்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய வகையிலும், பெண் பத்திரிக்கையாளர்களை தாக்கி அவர் பதிவிட்ட செயல் என்பது உண்மையில் ஒரு கிரிமினல் குற்றம். இந்த குற்றத்திற்கு அவருக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர் மன்னிப்பு கேட்பது என்பது மிகப்பெரிய நாடகம். அப்படிப்பார்த்தால் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு பின்னர் மன்னித்துவிடுங்கள் என்று சொல்லலாம்.
நாளைக்கு ஒரு வகுப்பு கலவலத்தை உண்டாக்கக்கூடிய பேச்சை ஒருவர் பேசிவிட்டு, அதனால் ஒரு கலவரம் உருவாகி, பின்னர் மன்னித்துவிடுங்கள் என்று சொன்னால் விட்டுவிடுவார்களா. ஒரு ஜாதி கலவரத்தை உருவாக்கக்கூடிய பேச்சை ஒருவர் பேசிவிட்டு, அதனால் ஜாதிக்கலவரம் உருவானால் அவரை விட்டுவிடுவார்களா. இதுபோன்ற குற்றச் செயல்களை செய்துவிட்டு என்னை மன்னித்துவிடுங்கள் என்று மன்னிப்பு கேட்பது ஏமாற்று வேலை.
இப்படித்தான் எச்.ராஜா சொன்னார், பெரியாரை பற்றி இழிவாக பதிவு செய்துவிட்டு, அது என் அட்மின் என்றார். தங்கள் கருத்துத்தான் என்று சொல்வதற்கு கூட துப்பில்லாதவர்கள் இவர்கள். கோழைகள் போல எதிர்ப்பு வந்ததும் ஓடி ஒளிகிறார்கள். பிறகு வேறொரு வகையில் உள்ளே வந்து புதிய பிரச்சனையை கிளப்புவது இவர்களின் வாடிக்கை. இதற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்பது எனது கோரிக்கை. இவ்வாறு கூறினார்.