தூத்துக்குடியில் இருந்து புதன்கிழமை காலை 11 மணியளவில் இண்டிகோ விமானம் சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்ய, ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகள் பலரும், அனுமதிக்கப்பட்ட நேரப்படி போர்டிங் செய்துள்ளனர். அப்படி, கைக்குழந்தையுடன் தம்பதி ஒருவர் விமான நிலையத்தில் காத்திருந்துள்ளனர். அவர்களிடம் இருந்த அந்த கைக்குழந்தை விமானத்தில் ஏறுவதற்கு முன்பு வரை, அமைதியாக அனைவரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளது. விமானம் டேக் ஆப் ஆகத் தொடங்கியதும் கதறியழத் தொடங்கியுள்ளது. பொதுவாக, ரன்வேயில் விமானம் அதிவேகத்தில் ஓடி, மேலே எழும்பும்போது புதுப் பயணிகளே பயப்படுவர். அப்படி, குழந்தைகள் அனைவரும் அழுவது வாடிக்கைதான்.
அதனால், பெற்றோர் குழந்தையை சமாதானப் படுத்தினர். சிறிது நேரத்தில் குழந்தை அழுகையை நிறுத்திவிடும் என நினைத்து இருந்துள்ளனர். ஆனால், குழந்தை அழுகையை விடுவதாய் இல்லை. இதனால் பதறிப்போன பயணிகளும் பெற்றோரும் குழந்தையை ஆற்றுப்படுத்தத் தெரியாமல் அரண்டுபோயுள்ளனர். இந்தநேரத்தில்தான்.. விமானத்தில் ஒரு வி.ஐ.பி பிரபலம் பயணித்துள்ளார். சற்றும் எதிர்பாராத விதமாக.. அந்தத் தம்பதி அமர்ந்திருந்த சீட்டுக்கு இரண்டு சீட் பின்னால் அமர்ந்திருந்த தமிழ்நாடு அமைச்சர் கீதா ஜீவன் எழுந்து வந்து, குழந்தையின் அப்பாவை எழுந்திருக்கச் சொல்லியுள்ளார். அவர் எழுந்ததும், குழந்தையின் தாயிடமிருந்து குழந்தையை வாங்கித், தன் மடியில் வைத்து தாலாட்டு பாடத் தொடங்கியுள்ளார்.
அமைச்சர் கீதாஜீவனின் இந்த செயலால் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போன பெற்றோரும் பயணிகளும், அடுத்து சில நிமிடங்களில் மேலும் ஆச்சரியமடைந்தனர். குழந்தைக்காக தாலாட்டுப் பாடத் தொடங்கிய அமைச்சர் கீதா ஜீவனின் குரலைக் கேட்ட குழந்தை, சட்டென அழுகையை நிறுத்தியுள்ளது. அழுது அழுது சோர்ந்துபோன குழந்தை கீதா ஜீவனின் தாலாட்டை கேட்டு அவரது மடியிலேயே தூங்கவும் செய்துள்ளது. இதையடுத்து, கீதா ஜீவன் குழந்தையை அவரது தாயிடம் ஒப்படைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.