வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரில் நடைபெற்ற "ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர்" நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் எம்.பி கதிர் ஆனந்த், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பொது மக்களிடம் இருந்து 13 துறை அதிகாரிகள் மனுக்களைப் பெற்றனர்.
இதில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “முதல்வரை தளபதி என்பதைக் காட்டிலும் மனுநீதி ஸ்டாலின் என சொல்லலாம். அந்த அளவுக்கு எப்போதும் மக்களின் குறைகளை மனுக்களாக வாங்கி வருகிறார்” எனப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஏரியில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுக்க அனுமதித்துள்ளோம். முறையக மண் அள்ளப்படுகிறதா என்றும், ஒதுக்கிய இடத்தில் ஒதுக்கிய அளவீட்டில் அள்ளப்படுகிறதா என்றும் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும்” என்றார்.
இதையடுத்து, ஆகஸ்ட் 15 க்குள் அதிமுகவில் ஓபிஎஸ்ஐ இணைக்க வேண்டும் என பியூஸ் கோயில் கூறியிருந்தது குறித்து கேட்டதற்கு, “அதெல்லாம் வெளிநாட்டு செய்தி...” எனப் பதில் அளித்தார். மேலும் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கொலை குறித்து கேட்டதற்க்கு, “முன்விரோதம் காரணமாக கொலைகள் நடக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றுதான் சொல்லுவார்கள்” என்றார்.
பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டுவது குறித்து கேட்டதற்கு, “அதற்கு வாய்ப்பில்லை; நாங்கள் கட்ட விட மாட்டோம். கண்காணித்து நடவடிக்கை எடுப்போம். தற்போது அங்குச் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்ததால் அப்படித்தான் சொல்லுவார். "செய்தியை நீங்க பண்ணுங்க, நாங்க செயலில் காட்டுகிறோம்" என அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.