அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு செய்தி வெளியிட்ட கோவையைச் சேர்ந்த தி.மு.க. உறுப்பினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
ஊரடங்கு விதிகளை மீறி, இந்த கைதைக் கண்டித்து, கோவை தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில், தி.மு.க. நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மற்ற நபர்கள் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், சீனிவாசன், சண்முகப்பிரியா, தேவேந்திரன் உள்ளிட்ட 43 பேர் முன்ஜாமீன் கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன் ஆஜராகி வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் நேற்று (29/06/2020) உத்தரவு பிறப்பித்த நீதிபதி இளந்திரையன், 43 பேரும் தலா 10 ஆயிரம் ரூபாயை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு செலுத்தி, அந்த ரசீதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து முன்ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.