கஞ்சா விற்பனை, கள்ளச் சாராயம், ஆன்லைன் ரம்மி, தொடர் திருட்டு, கள்ள லாட்டரி என படுபாதகமான சூழலுக்குத் தள்ளப்பட்டுவந்த மயிலாடுதுறை மாவட்டத்தைத் தனது அதிரடி நடவடிக்கையின் மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட கொள்ளிடம், மாப்படுகை, தரங்கம்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் கஞ்சா விற்பனை கொடிகட்டிப்பறந்தது. பள்ளிகள், கல்லூரிகள், இளைஞர்கள் கூடும் விளையாட்டு மைதானங்கள் எனக் குறிவைத்தே விற்பனை செய்தனர். கஞ்சாவை மிஞ்சிய நிலையில் கள்ளச் சாராயமும் இருந்துவருகிறது. இரண்டுக்கும் நிகராக ஆன்லைன் ரம்மியும், கள்ள லாட்டரியும் போட்டி போட்டுக்கொண்டு நடந்தது. இவைகள் ஒரு புறமிருக்க திருட்டுகளும் சத்தமே இல்லாமல் அரங்கேறிக்கொண்டிருந்தன. அனைத்து குற்றச் செயல்களும் கொடிகட்டிப் பறக்கத்தொடங்கியது. பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனைக்கு உள்ளாகினர்.
இந்த நிலையில், நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக பிரித்ததும் புதிய மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பேற்றார் ஸ்ரீ நாதா. அவர் மக்களோடு மக்களாக பயணிக்க தொடங்கியதோடு குற்றச்செயல்களைத் தடுக்க தனி கவனம் செலுத்தினார். பொதுமக்களின் தகவலுக்கும், பத்திரிகையாளர்களின் தகவலுக்கும், சமூக ஆர்வளர்கள் தகவலுக்கும் ரகசியம் காத்து முக்கியத்துவம் கொடுத்ததோடு, அதிரடி நடவடிக்கையிலும் இறங்கினார். அதனால் கஞ்சா விற்பனை செய்த பலரையும் கைது செய்ததோடு, கஞ்சா விற்பனை செய்யப்பட்ட இடத்தில் "கஞ்சா விற்பனை குறித்து யாராவது தகவல் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும்," என விளம்பர பலகையும் வைக்கச்செய்தார்.
அதோடு கள்ள லாட்டரி விற்பனை செய்துவந்த பலரையும் அதிரடியாக கைது செய்து உள்ளே தள்ளியிருக்கிறார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டால் வெளியில் வராதபடி வழக்குப்பாயும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.
"மாவட்ட எஸ்.பி.யின் அதிரடியால் பெரும்பாலானக் குற்றங்கள் குறைய தொடங்கி இருக்கிறது." என்கிறார் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர்.
அவர் மேலும் கூறுகையில், "கஞ்சா விற்பனையைவிட அதிகளவில் கள்ளச் சாராயமே வீதிக்கு வீதி விற்பனையாகுது. ஒவ்வொரு காவல் நிலைய பகுதிகளிலும் சில காவல்துறையினரின் மறைமுக அனுமதியோடு நடக்கிறது. புதுப்பட்டினம் காவல் நிலையம் பகுதியில் பட்டப்பகலிலேயே விற்பனை நடக்கிறது. வைத்தீஸ்வரன் கோயில், காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட திருப்புன் கூருக்கும் மன்னிப்பள்ளத்திற்கும் இடையே உள்ள சுடுகாட்டு பகுதியில் பாக்கெட் சாராய விற்பனை நடக்கிறது. மணல்மேடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட கடலங்குடியில்தான் காரைக்காலில் இருந்து பவுடர் கொண்டுவரப்பட்டு தனியாக உள்ள தோட்டத்தில் பாக்கெட் போடப்பட்டு பல இடங்களுக்கும் இரவு நேரங்களில் விநியோகிக்கப்படுகிறது. அப்படி விநியோகிக்கும் மொத்த வியாபாரி, மயிலாடுதுறையில் பல கோடி மதிப்பீட்டில் வீடு கட்டிவருகிறார். அவர் மீது இதுவரை ஒரு வழக்குகூட போடாமல் மிக கவனமாக பார்த்துக்கொள்கின்றனர் காவல்துறையினர். கள்ளச்சாராயத்திற்கும் மாவட்ட எஸ்.பி. அதிரடி காட்டினால் கிராமப்புற ஏழை பெண்களை வறுமையில் இருந்து காப்பாற்றிய புண்ணியம் கிடைக்கும்" என்றார்.