தமிழகத்தில் நாளை (05/07/2021) முதல் ஒரே மாதிரியான தளர்வுகள் அமலுக்கு வருகிறது. குறிப்பாக, தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பழனி உள்ளிட்ட முக்கிய கோயில்களில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வகையில், உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், "மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஜூன் 5- ஆம் தேதி முதல் காலை 06.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கோயிலில் நடைபெறும் காலபூஜை, அபிஷேகங்களைக் காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மேற்கு மற்றும் வடக்கு நுழைவு வாயில் வழியே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கோயிலில் தரிசனம் செய்த பின் எந்த ஒரு இடத்திலும் உட்கார பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோயிலுக்குள் பழம், தேங்காய் கொண்ட வர தடை விதிக்கப்பட்டுள்ளது; அர்ச்சனை செய்வதற்கும் அனுமதி இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலில் தேங்காய், பூ உள்ளிட்ட பூஜை பொருட்களைக் கொண்டு வரவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.