Skip to main content

போலீஸ் கண்முன்னே துடிதுடித்து இறந்து போன லாரி டிரைவர்; அப்பட்டமான மனிதக் கொலை!

Published on 03/02/2025 | Edited on 03/02/2025
The lorry driver incident in front of the police in thoothukudi

போலீஸ் அதிகாரிகள் கண்முன்னே நடந்த அப்பட்டமான மனித உரிமை மீறலால் தூத்துக்குடி மாவட்டத்தின் வல்லநாடு ஏரியாவே கொதிப்பில் இருக்கிறது. நடந்தவைகள் குறித்து வல்லநாடு கிராமத்தின் அந்தப் பகுதியிலுள்ள மக்களிடம் பேசியபோது தெரிவித்த தகவல்கள் நெஞ்சைப் பதற வைக்கின்றன.

வல்லநாடு பெருமாள் கோயில் தெருவில் இருப்பவர் சங்கரன். லாரி டிரைவரான இவரது மனைவி பத்ரகாளி. இவர்களுக்கு ப்ளஸ் 2 பயிலும் ஒரு மகளும், 10ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் உள்ளனர். பத்ரகாளி வீட்டு வேலை பார்ப்பவர். லாரி டிரைவரான சங்கரன் சொந்தமாகத் தொழில் செய்வதற்காக லாரி வாங்கும் பொருட்டு தன்னுடைய வீட்டை தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடந்த 2020ஆம் ஆண்டின் போது அடமானம் வைத்து  5 லட்சம் கடன் பெற்றிருக்கிறார். இதற்காக மாதந்தோறும் தவணைத் தொகை வட்டியாக ரூ. 11, 000 நிறுவனத்திற்குக் கட்டி வந்திருக்கிறார். சீராக ஓடிய லாரி ஓட்டம், விதியாக வந்த கொரோனா காலத்திலும், அதற்குப் பின்பும் படுத்து விட்டது. சங்கரன் எவ்வளவோ முயன்றும், அதனை சீர்ப்படுத்த முடியவில்லை. இதனால், சங்கரன் அந்த லாரியை விற்றுள்ளார். 

அதனால், அவரால் கடந்த சில மாதங்களாகவே தவணைத் தொகையைக் கட்ட முடியாமல் போயிருக்கிறது. தவணைக் கடனைக் கட்டச் சொல்லி சங்கரனுக்கு நெருக்கடி கொடுத்த நிதி நிறுவனம், அவரது வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிடுமாறு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. வழக்கை விசாரணை நடத்திய நீதிமன்றம், தவணைத் தொகையைச் செலுத்தாததால் வீட்டை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுதிர், முறப்பநாடு காவல் நிலைய போலீசார், நிதிநிறுவன ஊழியர்கள், அதன் வக்கீல்கள், பிப்ரவரி 1ம் தேதியன்று காலையில் வல்லநாட்டில் உள்ள சங்கரனின் வீட்டை ஜப்தி செய்ய வந்தனர். டி.எஸ்.பி. முன்னிலையில் நடவடிக்கை மேற்கொண்டதில், வீட்டிலிருந்த சங்கரன் மற்றும் அவரது மனைவி பத்ரகாளி இருவரையும் வலுக்கட்டாயமாக நிதி நிறுவனத்தினர் வெளியேற்றியிருக்கிறார்கள். இதனால் கூச்சல் குழப்பமாக அந்தத் தெருவாசிகள் சங்கரன் வீட்டின் முன்பு திரள டி.எஸ்.பி.யோ அவர்களை ஒதுக்கியிருக்கிறார்.

The lorry driver incident in front of the police in thoothukudi

வீட்டிற்கு சீல் வைத்து விடுவார்களே எனப் பதறிய சங்கரன், ‘ஐயா யிப்ப நா ஐம்பதாயிரம் வைச்சிறுக்கேன் இன்னும் ரெண்டே நாள்ல ஒரு லட்சம் வந்துறும். கட்றேன். கொஞ்சம் பொறுங்க என்று சொல்லிக் கெஞ்சியதை’ டி.எஸ்.பி கேட்கவேயில்லை என்று கூறப்படுகிறது. மாறாக அவர் எதுவும் சொல்லாமல், கணவன் மனைவியை வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருக்கிறார். வீட்டுச் சாமான்களை ஒதுக்கிக் கொள்ள மனைவி பத்ரகாளி கெஞ்சிக் கேட்டும் அவகாசம் கொடுக்கவில்லை. அவர்களை வெளியே தள்ளிவிட்டு மொத்தக் குழுமமும் வீட்டை சீல் வைப்பதிலேயே குறியாய் இருந்திருக்கிறார்கள். அந்த சமயம், வேகமாக வீட்டிற்குள்ளே ஓடிய பத்ரகாளி வீட்டிலிருநு்த பூச்சி மருந்து பாட்டிலை எடுத்து, தன் வீட்டுச் சாமான்கள் வெளியே அள்ளிக் கடாசப்பட்டிருப்பதைப் பார்த்து விரக்தியில் பூச்சி மருந்தைக் குடித்திருக்கிறார். இதைக் கண்டு பதறிப் போன பத்ரகாளியின் தாய், குடிக்காதே எனப் பதறித் தடுக்க, அலறிய கணவர் சங்கரன் ஓடிவர, போலீசாரோ அந்த பூச்சி மருந்து பாட்டலைத் தட்டி விட கீழே விழுந்த பூச்சி மருந்தை எடுத்து எதிர்பாராத விதமாக கணவர் சங்கரனும் குடித்திருக்கிறார். குடித்த பூச்சி மருந்தின் வேகம் ஏற, கணவனும் மனைவியும் மயங்கி கீழே விழுந்திருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாதவர்கள் வீட்டைப் பூட்டி சீல் வைப்பதிலேயே கவனம் செலுத்தியிருக்கிறார்கள். இதனிடையே மயங்கிய சங்கரன், வாயில் நுரை தள்ளியவாறு உயிருக்குப் போராடியிருக்கிறார். 

இதைக் கண்டு பதறிப்போன அங்கிருந்த தெருவாசிகள், ‘ஐயா, அவரு கெறக்காமாயிட்டாரு முதலுதவியாவது பண்ணுங்கய்யா’ என அங்கிருந்த சரவணனும் அந்தத் தெரு மக்களும் சொன்னதைக் கேட்காத டி.எஸ்.பி.யும் நிறுவன ஊழியர்களும் அவரைக் காப்பாற்ற முன்வராமல், அவர் நடிக்கிறார் எனக் கூறி அந்த மக்களை ஒதுங்கச் சொல்லி விரட்டியதோடு, ஒங்க மேலயும் கேஸ் போடுவோம் என்று சொல்லி மிரட்டலும் விடப்பட்டதாம். அதையும் மீறி, ஐயா ஆஸ்பத்திரிக்காவது கொண்டு போங்கய்யா என்று கெஞ்சிய மக்களின் சொல்லும் எடுபடாமல் போயிருக்கிறது. இதனிடையே அந்தத் தெருவாசியான ராஜ் மற்றவர்களும், சங்கரனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக அவசரமாக ஆட்டோவோடு வர, ஆட்டோவும் ஊழியர்களால் எச்சரித்து திருப்பி விரட்டப்பட்டிருக்கிறதாம். இப்படியாக சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக தம்பதியர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, அவர்களைத் திரும்பிப் பார்க்காமல் அலட்சியமாய் இருந்த டி.எஸ்.பி.யின் தரப்பினர், ஊழியர்கள் வீட்டின் உள் ரூம்களையும் வீட்டிற்கும் சீல் வைத்து வேலையை முடித்திருக்கிறார்கள். அதன் பிறகே தம்பதியரின் நிலையைப் பார்த்து 108 ஆம்புலன்சை தகவல் கொடுத்து வர வழைத்த போலீசார், அவர்களை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால், போகும் வழியிலேயே சங்கரனின் உயிர் துடிதுடித்துப் பிரிந்திருக்கிறது. அனுமதிக்கப்பட்ட பத்ரகாளிக்கு தொடர் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 

The lorry driver incident in front of the police in thoothukudi

இன்னொரு கொடுமையாக போலீசார் ஜப்தி செய்ய வந்த போது வீட்டில் சங்கரன் வளர்த்த மூன்று நாய்கள் வீட்டிற்குள்ளேயே கிடந்திருக்கிறது. அவைகளை வெளியேற்றாத போலீசாரும் நிதி நிறுவன ஊழியர்களும் அந்த மூன்று நாய்களையும் உள்ளேயே அடைத்து வைத்து வீட்டை சீல் வைத்துச் சென்றுள்ளனர். பதறிய அந்த நாய்களும் உணவின்றி தொடர்ந்து குறைத்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு மனிதாபிமானமற்ற பாதகத்தைச் செய்திருக்கிறார்கள். மக்களைக் காப்பாற்ற வேண்டிய போலீசாரின், கண்முன்னே இரண்டு மனிதர்கள் விஷம் குடித்து உயிருக்காகத் துள்ளத் துடித்துக் கொண்டிருப்பதையும் தெரிந்தே கொஞ்சங்கூடப் பதறாமல், அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பதைபதைப்புமில்லாமல் அலட்சியமாக நடந்துகொண்டிருக்கிறார்கள். 

The lorry driver incident in front of the police in thoothukudi

இதற்குள் இந்த விவகாரம் விஸ்வரூப மெடுக்க, இந்த டி.எஸ்.பி. மட்டும் நெனைச்சா சங்கரனைக் காப்பாத்திருக்கலாம் என்று கொந்தளித்த வல்லநாடுவாசிகள் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். வந்தவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் நீடிக்கும் என்று தூத்துக்குடி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து நாம் ரூரல் டி.எஸ்.பி. சுதிரைத் தொடர்பு கொண்டு கேட்டதில், ‘ப்ராப்ளம் சால்வ்வாயிறுச்சி’ என்று சொல்லி முடித்துக் கொண்டவர் பின்பு தன் மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். தூத்துக்குடி எஸ்.பி.யான ஆல்டர்ட் ஜானைத் தொடர்பு கொண்டதில் அவர் நமது அழைப்புகளை ஏற்கவில்லை. சீல்வைத்த வீட்டைத் திறக்கலாம், போன உயிர் திரும்புமா?

சார்ந்த செய்திகள்