
தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மத்திய அரசுப் பணிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் பணியிட மாற்றமும் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையராக பணியாற்றி வரும் சுதாகர் ஐ.பி.எஸ். அதிகாரியை மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் சுதாகர் ஐ.பி.எஸ். மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநராக பணியாற்ற உள்ளார். இவர் அடுத்த 5 ஆண்டுகள் அல்லது இவரது பணியிட மாற்றம் தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை சுதாகர் ஐ.பி.எஸ். அப்பதவியில் இருப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இவர் பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையராகக் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். மேலும் இவர் 2003ஆம் ஆண்டு தமிழக பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். முன்னதாக தமிழகக் காவல்துறையின் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த மகேஷ்குமார் அகர்வால் மத்திய அரசுப் பணிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். அதன்படி எல்லை பாதுகாப்புப் படையின் கூடுதல் இயக்குநராக மகேஷ் அகர்வால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் எல்லை பாதுகாப்புப் படையின் கூடுதல் இயக்குநராக 4 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்றும் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.