வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். காட்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பை இந்தாண்டு முடித்துள்ளார். இன்னும் கல்லூரி சேரவில்லை.
![well](http://image.nakkheeran.in/cdn/farfuture/SA1b_ilR5dEZB-GmBgm1T7oICDPW8-yDI7zHNAg_92M/1557726116/sites/default/files/inline-images/well_1.jpg)
இந்நிலையில் மே 12ந் தேதி காலை, தனது தந்தை சிதம்பரத்துடன் தங்களது நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச நிலத்துக்கு சென்றனர். நிலத்தில் அவர்களுக்கு சொந்தமான 72 அடி ஆழம் கொண்ட சுற்றுசுவர் இல்லாத பழைய கிணற்றில் அவரது மகள் கால் தவறி விழுந்துள்ளார்.
கிணற்றில் 4 அடி உயரத்துக்கு மட்டும்மே தண்ணீர் இருந்ததால் விழுந்து வேகத்தில் இடது கால் எலும்பு உடைந்து போனதால் வலி தாங்க முடியாமல் கத்தி அழுதுள்ளார். தன் மகள் கிணற்றில் விழுந்து அலறுவதை பார்த்து, அவரது தந்தை கத்தி கூச்சல் போட்டார். உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். காட்பாடியில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி மாணவியை உயிருடன் மீட்டனர்.
கால் எலும்பு முறிந்ததால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி காவல்துறையில் புகார் எதுவும் தராததால் காட்பாடி போலீஸ் இதுபற்றி எதுவும் விசாரிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.