திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியாபுரம் அடுத்த ஆங்கியம் கிராமத்தில் சிறுத்தை ஒன்று சில நாட்களுக்கு முன் இருவரைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினரின் கேமரா மூலம் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டு, உருவ அமைப்பின்படி, அது ஆண்சிறுத்தை எனத் தெரிவித்தனர். ஆனால், சிறுத்தையின் கால்தடங்களை பரிசோனைக்குட்படுத்திய பொழுது, அது பெண் சிறுத்தை எனத் தெரியவந்தது. அதே போல் கேமரா பதிவுகளின்படி, சிறுத்தை ஆங்கியம் காட்டிலிருந்து வெளியேறி கொல்லிமலை வனப்பகுதியில் நுழைந்துவிட்டதாக வனத்துறை அறிவித்தனர். இதனையடுத்து, ஆங்கியம் பொது மக்கள் நிம்மதியடைந்தனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக, இரவு வேளைகளில் வயல்வெளிகளில் சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்பதாக ஆங்கியம் பொதுமக்கள் புகார் எழுப்பினர். நேற்று காலை 10 மணியளவில் ஆங்கியத்தை சேர்ந்த 14வயது சிறுமி கமலி, தோட்டத்தில் வேலை பார்க்கும் தனது தாத்தாவிற்கு சாப்பாடு எடுத்துச்சென்று கொடுத்துள்ளார். பின்னர் திரும்பும் வழியில், சிறுத்தை உறுமலோடு குறுக்கே ஓடியதைக் கண்டு, செய்வதறியாது திகைத்து நின்றார். சிறிது நேரம் கழித்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஊருக்குள் வந்து பெரியவர்களிடம் சொன்னதன் பேரில், ஊர் மக்கள் விபரீதத்தைப் புரிந்து கொண்டு அழகாபுரி கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் மூலம் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இது தவிர ஐடிஐ மாணவர் உதயன் என்பவர் அதே பகுதியில் இன்று இரண்டு சிறுத்தை குட்டிகளைப் பார்த்துள்ளார்.
அந்த சிறுத்தை குட்டிகள் அங்குமிங்கும் ஓடி விளையாடியதை உதயன் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து உதயன் கிராம முக்கியஸ்தர்களிடம் தகவல் அளித்துள்ளார். இதன் மூலம் பெண் சிறுத்தை குட்டிகளுடன் காட்டுப் பகுதியில் முகாமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது. விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள ஆங்கியம் பொதுமக்கள் இதனால் அச்சத்திலுள்ளனர். கூலி வேலையை நம்பியுள்ள தொழிலாளிகள், ஆடு, மாடுகளை வாழ்வாதாரமாகக் கொண்ட பொது மக்கள், விவசாயிகள் ஆகியோர் தோட்ட பகுதிகளுக்குச் செல்ல அச்சமடைந்துள்ளனர். சிறுவர்கள், குழந்தைகள் உயிர் பயத்துடன் உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்கக் கோரிக்கை வைத்துள்ளனர்.
கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடித்தால் குட்டிகளைத் தவறவிட வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் இதை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுடன் அந்த கிராமத்தில் முகாமிட்டுள்ள திருச்சி வனத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். சிறுத்தையின் நடமாட்டத்தை அறிய இன்று வனத்துறையினர் டிராப் கேமரா பொருத்தியுள்ளனர். மீண்டும் குட்டிகளுடன் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால் கிராம மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.