சேலத்தில், செயின் பறிப்பு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி பாம்பே மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் பாம்பே மணிகண்டன் என்கிற மணிகண்டன் (27). இவரும், இவருடைய கூட்டாளி ரப்பர் ஜெயபிரகாஷ் என்பவரும், சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை நர்ஸ் சாந்தி என்பவர் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரிடம் கத்தி முனையில் இரண்டு பவுன் செயினை பறித்தனர். இச்சம்பவம் கடந்த ஜூலை 18ம் தேதி நடந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். பாம்பே மணிகண்டன், கடந்த ஜனவரி மாதம் இதேபோல் செயின் பறிப்பு வழக்கில் சூரமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர் கடந்த ஜூலை மாதம் அன்னதானப்பட்டியில் வீடு புகுந்து தனியாக இருந்த பெண்ணிடம் கத்தி முனையில் செயின் பறிப்பில் ஈடுபட்டார்.தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பாம்பே மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அன்னதானப்பட்டி போலீசார், மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஆகியோர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தனர். அவருடைய உத்தரவின்பேரில் இன்று செயின் பறிப்பு ரவுடி மணிகண்டனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.