Skip to main content

அருந்ததியர் சமூகத்திற்கு உள் இடஒதுக்கீடு -கொ.ம.தே.க ஈஸ்வரன் வரவேற்பு! 

Published on 27/08/2020 | Edited on 27/08/2020
kmdk eswaran

 

"அருந்ததியர் சமூகத்திற்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம். மேலும் அருந்ததியருக்கு மாநில அரசு 6 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க முன்வர வேண்டும்." என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

"தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் 3 சதவீத உள் இட ஒதுக்கீடு அருந்ததியர் சமூகத்திற்கு வழங்க மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அருந்ததியர் சமூக மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டின் பலனை முழுமையாக அனுபவிக்காத சமூகமாகவே அருந்ததியர் சமூகம் இருந்து வருகிறது. அருந்ததியர் சமூகத்திற்கு உள் இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அதிகப்படியான இளைஞர்களால் நுழைய முடியும். இதுவே   அருந்ததியர் சமூகத்தை பொருளாதாரத்தில் உயர்த்த உதவும்.

 

தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருக்கின்ற மூன்று பெரும்பான்மை சமுதாயங்களும் சம அளவிலான மக்கள் தொகையோடு இருக்கிறார்கள். அதனால் அருந்ததிய சமுதாயத்திற்கு மூன்றில் ஒரு பங்கான 6 சதவீத உள் இட ஒதுக்கீடு கேட்பதற்கு உரிமை இருக்கிறது. உள் ஒதுக்கீடு 6 சதவீதமாக கொடுத்தால்தான் விளிம்பு நிலையில் இருக்கின்ற அருந்ததியர் சமுதாயத்தை முன்னேற்ற முடியும்.

 

அருந்ததியர்களுடைய தற்போதைய நிலைமையைப் புரிந்து கொண்டு தமிழக அரசு அருந்ததிய சமுதாயத்தின் கடந்த 10 ஆண்டு கோரிக்கையான 6 சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொடுப்பதற்கு முன்வர வேண்டும். பின்தங்கிய நிலையில் உள்ள அருந்ததியர் சமூகத்தை முன்னேற்ற உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மனதார வரவேற்கிறது." எனக் கூறியிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்