மாவோயிஸ்ட் மணிவாசகம் கேரள காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய உடலை அடையாளம் காட்டுவதற்கு அவருடைய சகோதரி லட்சுமிக்கு கேரள காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அன்பரசன் நாமக்கல்லைச் சேர்ந்தவர். உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அவர் தாக்கல் செய்திருந்த மனுவில்‘கடந்த அக்டோபர் 29- ஆம் தேதி கேரள மாநிலம் அகழிக்காடு பகுதியில் கேரள போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார் மணிவாசகம். அவருடைய மனைவி கலா மற்றும் சகோதரி சந்திரா ஆகியோர் திருச்சி சிறையில் உள்ளனர். கொல்லப்பட்ட மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண திருச்சி சிறைக்காவலர்கள் அனுமதியளிக்கவில்லை. எனவே, சந்திராவுக்கும் கலாவிற்கும் 30 நாட்கள் பரோல் வழங்கவும், மணிவாசகத்தின் உடலை அடையாளம் காணவும் அனுமதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலை அடையாளம் காணுவதற்கு அவருடைய மற்றொரு சகோதரி லட்சுமிக்கு கேரள காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென்றும், கலா மற்றும் சந்திரா ஆகியோரின் பரோல் குறித்த வழக்கினை நாளைய தினம் ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.