மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, மகாராஷ்டிராவில் நடந்த சம்பவம், மோடி அரசு இந்திய அரசியல் சட்டத்தை காலில் போட்டு மிதிக்கிற சம்பவமாக உள்ளது. பாராளுமன்றத்தில் மோடி அரசியல் சட்டத்தை புகழ்ந்து பேசுகிறார். ஆனால் அதே நேரத்தில் எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்திற்கு வெளியே, அரசியல் சட்டத்தை மோடி அரசு மதிக்கவில்லை என போராட்டம் நடத்துகின்றனர். இந்த நிலையில்தான் இந்தியா உள்ளது என்றார்.
பின்னர் இரவு 12 மணிக்கு பிரதமரின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சியை விலகிக் கொள்கிறார்கள் இது கண்டனத்துக்குரியது. பிஜேபி நினைத்தால் எதுவும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. இதில் உச்ச நீதிமன்றம் காலக்கெடு கொடுக்கவில்லை என்றால் இவர்கள் குதிரை பேரம் பேசி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்து இருப்பார்கள். மகாராஷ்டிராவில் பாஜக செய்யும் செயல் அரசியல் சட்டத்தை கேவலப்படுத்தும் காரியமாகும் என்று குற்றம்சாட்டினார்.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை அறிவித்துவிட்டு, நேரடித் தேர்தலை மறைமுக தேர்தலாக மாற்றி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. வார்டுகள் மறுசீரமைப்பு செய்து ஒழுங்குபடுத்தப்படவில்லை. புதிதாக பிரிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சிகள் அமைக்கப்படவில்லை. இவைகளெல்லாம் தேர்தல் நடத்தாததற்கு அதிமுக அரசு செய்யும் செயலாக உள்ளது. தமிழகத்தில் துக்ளக் தர்பார் ஆட்சி நடக்கிறது. அதிமுகவினர் பொதுக்குழுவில் நீட்தேர்வு விலக்கு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் வைத்து நிறைவேற்றி தனி சட்டம் இயற்றி மத்திய அரசுக்கு ஏன் அழுத்தம் தரவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, ஐஐடியில் மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்டது குறித்து முழுமையான விசாரணை இல்லை. அதற்காக விசாரணைக் குழு அமைக்கப்படவில்லை. தொடர்ந்து இதுபோன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது கண்டனத்துக்குரியது. இதற்கு ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் சிதம்பரம் நடராஜர் கோயில் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் பொருத்தமானது. ஒரு தனிப்பட்ட சமூகத்தில் இருப்பது சரியான நிலை இல்லை. நடராஜர் கோயிலில் செவிலியரை தாக்கிய தீட்சிதரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரை கைது செய்வதில் தாமதப்படுத்துவது, காவல்துறை அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
மேலும் அரசியலில் நடிகராக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா அரசியல் கட்சியில் இருந்துகொண்டு மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றினார்கள். ஆனால் கமலும், ரஜினியும் அப்படி அல்ல. கமல் மற்றும் ரஜினி ஒன்றாக இணைவது அவர்களால் தனியாக ஒன்றும் செய்ய முடியாது என்பதையே காட்டுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் தான் பல்வேறு குழப்ப நடவடிக்கைகளை செய்து வருகிறது என்று தெரிவித்தார்.