சிதம்பரம் அருகே உள்ள ஒரத்தூர் பகுதிக்கு உட்பட்ட கிளியனுரில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டம் அமைக்க ஓஎன்சிசி நிறுவனம் மூலம் ஆய்வு பணி மேற்கொண்டு குழாய் பதித்துள்ளனர். இதனையறிந்த திரைப்பட இயக்குநர் கெளதமன், மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட விவசாயிகள், இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டடோர் சம்பந்தபட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்டு கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் அனைவரும் குழாய் பதித்துள்ள இடத்தை முற்றுகையிட்டு மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பினார்கள்.
இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கௌதமன், தமிழனின் நிலத்தில் மக்களுக்கு கேடு விளைவிக்கும் எந்த திட்டத்தினையும் அனுமதிக்க மாட்டோம். கதிராமங்கலத்தில் அமைத்துள்ள குழாய்களை விட இங்கு அமைக்கப்பட்ட குழாய் மிகவும் பெரியது. இந்த இடத்தில் குழாய் அமைக்கும் போது இப்பகுதியிலுள்ள மக்களை இந்த இடத்திற்கு 6 மாதம் அனுமதிக்கவில்லை. குழாய் அமைக்க அடிப்படை வேலைகள் நடந்தபோது அதிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை குடித்த இந்த பகுதியில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் உயிர் இழந்துள்ளது. பல பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தை வாழ தகுதியற்ற இடமாக உலக சுகாதர நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டங்கள் குறித்து கடலூர் மாவட்ட மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. அதை மக்களுக்கு ஏற்படுத்துவோம். ராணுவமே வந்தாலும் எதிர்கொள்வோம். எங்களுக்கு நீட் வேண்டாம். நீர் தான் வேண்டும் என பல்வேறு போராட்டங்களை உணர்வு பூர்வமாக மத்திய அரசை கண்டித்து மக்கள் போராடி வருகிறார்கள். தமிழக அரசோ இதனை வரவேற்று கொல்லையடிக்கவும் மக்களை கொலை ‘செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறது. கதிராமங்கலத்தை விட ஒரத்தூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.