கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. இதற்குத் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பை பதிவுசெய்துவருகிறது. இதற்கிடையே அணை கட்டுவதற்குத் தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழ்நாடு அரசுக்கு சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார்.
கர்நாடக முதல்வர் எழுதிய கடிதத்திற்குப் பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், மேகதாது அணை கட்டும் முடிவைக் கர்நாடக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அந்த வகையில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக ஆட்சியைப் பயன்படுத்திக்கொண்டு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மேற்கொண்டுவருகிறார். மேலும் மத்திய அரசு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதி பங்கீட்டுத் தொகை, கரோனா தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றை சரிவர வழங்கவில்லை” என கூறினார்.