
மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரான நடிகர் கமலஹாசன் தனது புதிய கட்சியை தொடங்கிய பிறகு முதன்முதலாக மேற்கு மாவட்டமான ஈரோடு, திருப்பூர் ஆகிய கொங்கு மண்டலத்தில் இன்றும் நாளையும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார்.
இன்று மதியம் திருப்பூர் மாவட்டம் அவினாசி வரும் கமல் அங்கு தனது கட்சி நிர்வாகிகளின் வரவேற்ப்பை ஏற்றுக் கொண்டு அருகே உள்ள ஒரு கிராமத்தில் மதிய உணவு சாப்பிடுகிறார். பிறகு மதியம் 2.30க்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். தொடர்ந்து மதியம் 3 மணிக்கு சித்தோடு அருகே உள்ள மாமரத்துப்பாளையத்தில் தனியார் மாற்றுத்திறனாளிகள் பள்ளியை திறந்து வைக்கிறார். அடுத்து மாலை 6 மணிக்கு ஈரோடு கார்னிஷ் கிளப்பில் மாவட்ட கட்சியினரோடு கலந்துரையாடல் செய்கிறார்.
இரவு ஈரோட்டில் தங்கும் கமல் நாளை 11ந் தேதி காலை 8.30க்கே மொடக்குறிச்சி சென்று கொடியேற்றி மக்களை சந்திக்கிறார். அடுத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பும் அதனை தொடர்ந்து கோபி, சத்தியமங்கலம், பவானி, அந்தியூர் என தொடர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வேகச்சுற்றாக இரண்டு நாள் பயணம் செய்கிறார்.
கொங்கு மண்டலம் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுக்கு கூடுதல் செல்வாக்கு கொண்டது கட்சி தொடங்கிய முதல் ரவுண்டிலேயே இங்கு கால் பதிக்கும் கமலுக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு கிடைக்கிறதோ, அந்தளவுக்கு அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி சரியும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இதனால் அ.தி.மு.க.வட்டாரத்தில் அதிர்வலைகள் தென்படுகிறது.