![Kamal Haasan, the Governor Tamilisai who came to vote](http://image.nakkheeran.in/cdn/farfuture/upkz-02Ij8R2ryn-2BgEVbF7p4NBGxYspnQnyy-JHA4/1617674411/sites/default/files/inline-images/zzz6756.jpg)
தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திநகர் வாக்குச்சாவடியில் தந்தை சிவகுமார், தம்பி கார்த்தியுடன் வாக்களிக்க நடிகர் சூர்யா வரிசையில் நின்றார். அதேபோல் நடிகர் ரஜினிகாந்தும் அவரது தொகுதியில் வாக்கினை பதிவு செய்ய சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார். பின்னர் தனது வாக்கினை பதிவு செய்தார். அதேபோல் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் அவரது வாக்கினை செலுத்த வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளார். அவருடன் அவருடைய மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஆகியோரும் வாக்களிக்க வருகை புரிந்துள்ளனர். அதேபோல் புதுச்சேரி மாநில ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜனும் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வருகை புரிந்திருந்தார்.