சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 31 ஆம் தேதி இந்தப் புகார் குறித்து கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது. அதன்பின் மாணவிகள் அந்தப் போராட்டத்தை தற்காலிகமாகத் திரும்பப் பெற்றனர்.
கலாஷேத்ரா கல்லூரியில் 2019 ஆம் ஆண்டு படித்த கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்தக் கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குறிப்பாக அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட மாணவிகளுடன் நேரடியாக விசாரணை நடத்தி புகாரின் உண்மைத் தன்மையை உறுதி செய்தனர். தொடர்ந்து மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்து போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இந்நிலையில் கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் டிஜிபி லத்திகா சரண் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண், மருத்துவர் ஷோபா வரதாமான் ஆகியோர் உள்ளனர். நேற்று கலாஷேத்ரா கல்லூரி அறக்கட்டளை தலைவர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மூன்று முக்கிய நபர்கள் அடங்கிய இந்தக் குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக புகாருக்கு உள்ளான நான்கு பேராசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது விசாரணைக் குழுவானது அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.