சாத்தான்குளம் சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று திடீரென்று அந்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி மாற்றப்பட்டார் என்ற செய்தி வந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள் தமிழ்நாட்டில் உயர்நீதிமன்ற பிரிவு என்ற அடிப்படையில் மதுரையில் பணியாற்ற கடமைப்பட்டுள்ளார்கள். அதில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழக்கமான நடைமுறையில் மாற்றப்படுவதுதான், அப்படி மாற்றப்பட்டவர்தான் நீதிபதி பிரகாஷ்.
தற்போது இந்த சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து நீதிபதி பிரகாஷ் உள்ளிட்ட அமர்வு இந்த விஷயத்தில் நியாயத்தை ஏற்படுத்தியதாக செய்திகள் வருகிறது. ஆனால் தற்போது நீதிபதிகள் மாற்றம் என்ற செய்தி இரு வேறு கோணத்தில் மக்கள் மத்தியில் செல்கிறது. உண்மையில் நீதிபதிகள் மாற்றம் என்பது வழக்கமான நடைமுறைதான். சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த தந்தை, மகன் இருவருக்கும் நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் உட்பட அனைவரும் எதிர்பார்த்து இருப்பது ஒன்றுதான்.
இதில் நீதிபதி பிரகாசம் மாற்றத்தினால் எதுவும் நிகழாது. அடுத்து வருகிற எந்த நீதிபதி யாராக இருந்தாலும் ஏற்கனவே இந்த சம்பவத்தில் அடிக்கோடிட்ட மாதிரி சம்பந்தப்பட்ட பிரச்சனை வெளிவந்துவிட்டது. அதன் தொடர்ச்சியே தமிழகம் முழுக்க இன்று தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்து வருகிறது. இந்நிலையில் நீதிபதி மாற்றம் சம்பந்தமாக நாம் மூத்த வழக்கறிஞர் பவானியை சேர்ந்த ப.பா.மோகன் அவரிடம் பேசினோம். இதுகுறித்து அவர் கூறியதாவது,
“உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் மாற்றம் என்பது வழக்கமான நடைமுறைதான். இந்த வழக்கில் தானாக முன்வந்து மதுரைக்கிளை வழக்கினை எடுத்தபொழுது, அதன்பிறகு அந்த வழக்கின் திசை மாறுபட்டு சம்பந்தப்பட்ட காவலர்கள் மேல் குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது. அதில் கீழமை நீதிமன்றத்தில் இருந்த மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முதன்முதலில் அந்த காவல் நிலையத்தில் இருந்த பெண் தலைமை காவலர் ரேவதியிடம் வாக்குமூலம் வாங்கினார். இது நிகழாது என மறைமுக பின்னணி இருந்தது ஆனால் நிகழ்ந்தது. வேறுவழியே இல்லாமல் நீதிமன்றம் அதை பதிவு செய்தது. தற்போது வரை இந்த வழக்கு தொடர்ச்சியாக சரியான பாதையில் சென்று வருகிறது. இந்த நீதிபதி மாற்றப்பட்டாலும் வேறு எந்த நீதிபதி இந்த அமர்வுக்கு வந்தாலும் இதன் திசை மாறாது. ஆகவே முன்பு இருந்த நீதிபதி இந்த வழக்கில் இருந்து மாற்றப்பட்டார் என்ற அச்சம் மக்களுக்கு தேவையில்லை. வருகிற நீதிபதி புலன் விசாரணை, சாட்சியம் உள்ளிட்ட ஆகிய விஷயங்களை சரியாக ஆய்வு செய்து வழக்கு சென்றால் வழக்கின் தன்மை நேராகச் செல்லும்.
இதில் குறிப்பிடத்தகுந்த மிக முக்கியமான விஷயம் குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபொழுது பெஸ்ட் பேக்கரி என்ற பேக்கரி எரிப்பு வழக்கில் பலர் பேர் கொல்லப்பட்டார்கள். அதில் உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது, அந்த உத்தரவுப்படி, அரசு வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்களோடு ஒரு மூத்த வழக்கறிஞரை நியமித்து அவர் மூலமாக அறிக்கை கேட்டது. அதனடிப்படையில் பெஸ்ட் பேக்கரி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல் இந்த வழக்கிலும் அரசுக்கு ஆதரவு நிலை இல்லாத ஒரு மூத்த வழக்கறிஞரை நியமித்து விசாரணையை தொடங்கினால் இந்த வழக்கின் உண்மையான முகம் வெளிப்படும். ஆகவே சாத்தான்குளம் விஷயத்தில் யார், யார் குற்றவாளி என்பதை விசாரணை முடிவில், நீதிமன்ற உத்தரவின் கோணத்தில்தான் பார்க்க வேண்டும். இதில் உயர் நீதிமன்ற நீதிபதி மாற்றப்பட்டார் என்ற வாதம் எல்லாம் தேவையில்லை.
தற்போது உள்ள நீதிபதி வழக்கமான நடைமுறையில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார். வருகின்ற நீதிபதி இந்த புலன் விசாரணையில் இருந்து செயல்படுவார் என்கின்ற நம்பிக்கை மனிதநேயமுள்ள வழக்கறிஞர்கள் மத்தியில் உள்ளது. மக்கள் இதில் ஏதோ நிகழ்ந்துவிட்டது என்று என்ற அச்சம் கொள்ள வேண்டாம்” எனக் கூறினார் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன்.