Skip to main content

“நெல் மூட்டைகள் முழுவதும் நனைந்து எங்கள் கனவைச் சிதைத்துவிட்டது..” - விவசாயி கொடுத்த கண்ணீர்ப் பேட்டி!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

paddy issue delta farmers

 

"நெல் மூட்டைகள் நனைந்ததற்கு எந்த வகையிலும் விவசாயிகள் காரணமில்லை. எனவே ஈரப்பதம் குறித்த விதிகளைத் தளர்த்தி, நனைந்த நிலையில் உள்ள நெல் முட்டைகளைக் கொள்முதல் செய்ய வேண்டும்" எனக் கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்கின்றனர் டெல்டா விவசாயிகள்.

 

காவிரி பாசன மாவட்டங்களான டெல்டா மாவட்டங்களில், சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்ட பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து, சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்குப் பெருத்த பாதிப்பு ஏற்படும் அவலமே இருக்கிறது. விரைந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என ஊருக்கு ஊர் போராட்டம் நடந்துவருகிறது. இதற்கிடையில் நாற்பது கிலோ சிப்பத்திற்கு நாற்பது ரூபாய் கேட்டு விவசாயிகள் அலைகழிக்கப்படும் அவலமும் அரங்கேறி வருகிறது. 

 

இது குறித்து திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் விவசாயி கண்ணன் கூறுகையில், "நடப்பாண்டில் குறுவை பருவத்தில் நல்ல விளைச்சல், கூடுதல் லாபம் கிடைக்கும், கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யவும், வாங்கியக் கடனை அடைக்கவும், இது உதவும் என்று கனவு கண்டிருந்தோம். ஆனால், அது கனவாகவே முடிந்துவிட்டது. எதிர்பாராத விதமாகப் பெய்த கன மழையால், அறுவடை செய்து, கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் முழுவதும் நனைந்து எங்கள் கனவைச் சிதைத்துவிட்டது.

 

மழையில் நனைந்த நெல் மூட்டைகள் சேதமடைந்து விட்டதைப் பகுப்பாய்வு செய்வதை விட பாதிப்புக்குத் தீர்வு காண்பதும், இனி அத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுப்பதும் தான் சரியானதாக இருக்கும். நெல் மூட்டைகள் நனைந்ததற்கு எந்த வகையிலும் விவசாயிகள் காரணமில்லை. எனவே ஈரப்பதம் குறித்த விதிகளைத் தளர்த்தி நனைந்த நிலையில் உள்ள நெல் முட்டைகளைக் கொள்முதல் செய்ய வேண்டும்." என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி போராட்டம்! டெல்டாவில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் முடிவு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Delta farmers have  tractor rally in support of the struggling farmers in Delhi

விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடு! என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் டெல்லி நோக்கி புறப்பட்டனர்.

டெல்லி எல்லைக்குள் விவசாயிகளை நுழையவிடாமல் மத்திய அரசு கம்பிவேலி தடுப்புகளையும் தடுப்பு சிமெண்ட் கட்டைகளையும் வைத்து தடுத்துப் பார்த்தனர். ஆனால் விவசாயிகள் தடுப்புகளை தாண்டிச் செல்ல முயன்றனர். அதனால் தடுப்பு சுவர்களை எழுப்பி விவசாயிகளை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும், தண்ணீர், ரப்பர் குண்டுகளையும் மழைபோல வீசி தாக்கினர். இந்த தாக்குதலின் போதே பேச்சுவார்த்தையும் நடந்தது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டும் நடந்த தாக்குதலில் கியான்சிங் என்ற 65 வயது விவசாயி பலியானார்.

தொடர்ந்து விவசாயிகள் மீதான தாக்குதல் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், இந்தியா முழுவதும் இருந்து விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களும் கூடத் தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட விவசாயிகள் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக டெல்டா மாவட்டத்திலும் போராட்டம் நடத்த முடிவு செய்து நாளை காலை புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லையான ஆவணம் கைகாட்டியில் நான்கு சாலைகளிலும் டிராக்டர்களில் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் செய்ய தயாராகி வருகின்றனர். இதே போல தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டங்கள் நடத்த ஆலோசித்து வருகின்றனர். 

Next Story

இன்று திறக்கப்படுகிறது மேட்டூர் அணை... 3.50 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி என இலக்கு! 

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

Mettur Dam opens today ... Target to cultivate 3.50 lakh acres!

 

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (12.06.2021) திறந்துவைக்கக்கிறார். திருச்சி, தஞ்சை, சேலம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள முதல்வர் திட்டமிட்டிருந்தார்.  அதனடிப்படையில் நேற்று  தஞ்சை கல்லணையில் ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் கடைமடை பகுதிக்குத் தண்ணீர் செல்வதற்காக தூர்வாரப்படும் இடங்களையும் முதல்வர் ஆய்வு செய்தார். இந்நிலையில், இன்று காலை 10 மணி அளவில் மேட்டூர் அணையை டெல்டா பாசனத்திற்காக திறந்துவைக்கிறார் மு.க. ஸ்டாலின்.

 

இதனால் மேட்டூர் அணையை திறக்கும் முதல் திமுக முதல்வர் என்ற பெருமையை ஸ்டாலின் பெறகிறார். மேட்டூர் அணையை அமைச்சர்கள் திறந்து வந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு அதிமுகவின் முதல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையை திறந்து வைத்திருந்தார். இந்நிலையில் திமுகவின் முதல் முதல்வராக ஸ்டாலின் மேட்டூர் அணையை இன்று திறக்க இருக்கிறார்.

 

அந்தத் தண்ணீரானது அடுத்த மூன்று நாட்களில் திருச்சிக்கும் அதற்கடுத்த நாளில் தஞ்சைக்கும் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்  டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி தொடரும். தற்போது டெல்டா மாவட்டங்களில், தஞ்சாவூரில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஏக்கரும், திருவாரூரில் 87,700 ஏக்கரும், நாகையில் 4,500 ஏக்கரும், மயிலாடுதுறையில் 96,800 ஏக்கரும், திருச்சியில் 10,600 ஏக்கரும், அரியலூரில் 4,900 ஏக்கரும், கடலூரில் 40,500 ஏக்கருக்கு என மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்வதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.