ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியுள்ளது. தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன், மகள் ஆகிய இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, தமிழக அரசு தற்போது அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து ஜெ.தீபா, “இது முடிவல்ல ஆரம்பம், தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்துவேன். வேதா இல்லத்தை விட்டு தரவேண்டும் என ஜெயலலிதா நினைக்கவில்லை. அதிமுக தலைமை அலுவலகத்தை நாங்கள் எடுத்து கொண்டோமா அல்லது வழக்கு தொடர்ந்தோமா. ஜெயலலிதாவின் மரணம் எதிர்பாராதது இல்லையெனில், உயில் எழுதி வைத்திருப்பார். வேதா இல்லத்தை கோயிலாக நினைக்கலாம் ஆனால் கோவிலாக மாற்ற முடியாது. அரசின் நடவடிக்கை அத்துமீறிய செயல். அரசின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். ஜெயலலிதாவால் வாங்கப்பட்ட கடனுக்கு நாங்கள் பொறுப்பேற்று உள்ளோம். ஜெயலலிதா குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்தும் வேதா இல்லத்தில் தான் நடந்தன. இல்லத்தில் உள்ள பொருட்களை நீதிமன்றத்தில் அரசு ஒப்படைத்து இருக்க வேண்டும்'' எனக்கூறியுள்ளார்.
அதேபோல் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்பது மக்களின் எண்ணம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், கடமையும், உரிமையும் உள்ள நாங்கள் தமிழக மக்களின் எண்ணத்தை நிறைவேற்றி உள்ளோம்.
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற முடியாத நிலை ஏற்பட்டால் வரலாறு எங்களை சபிக்கும். வரலாறுகளை மாற்றி எழுதவும் கூடாது, திருத்தம் கூடாது என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அதேபோல் வேதா இல்லம் ஒன்றும் கிஃப்ட் என ஜெ.தீபா நினைக்க வேண்டாம் என கூறிய அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி, ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமையாக்கியது மகிழ்ச்சியான அறிவிப்பாகும் என தெரிவித்துள்ளார்.