புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், சமூக ஆர்வலருமான ஜகபர் அலி கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடியதால் கடந்த 17 ந் தேதி கனிம கொள்ளையர்களால் மினி லாரியை 2 முறை மோதி படுகொலை செய்தனர்.
இந்த வழக்கில் ஆர்.ஆர் கிரஷர் உரிமையாளர்கள் ராமையா, ராசு, ராசு மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரி ஓட்டுநர் காசிநாதன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை அடுத்து திருமயம் காவல் ஆய்வாளர் குணசேகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார், வட்டாட்சியர் புவியரசன் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். கனிமவளத்துறை ஏ.டி லலிதா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜகபர் அலியின் உடற்கூறாய்வு சரியாக செய்யப்படவில்லை அதனால் மறு பிரேதப்பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஜகபர் அலியின் மனைவி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜகபர் அலி உடலைத் தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்க உத்தரவிட்ட நீதிபதி, பின்பற்றப்பட வேண்டிய சில விதிமுறைகளையும் கூறியிருந்தார்.
அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை திருமயம் வட்டாட்சியர் ராமசாமி, சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஜெகபர் அலி உடல் தோண்டி எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைதாகி உள்ள முருகானந்தம், காசிநாதன், ராசு, ராமையா, தினேஷ்குமார் ஆகிய ஐந்து நபர்களும் புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் இருந்து புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு இன்று மாற்றம் செய்யப்பட்டு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர் குற்றவாளிகள் ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த புதுக்கோட்டை நிதித்துறை நடுவர் நீதிபதி பாரதி, மூன்று நாட்கள் ஐந்து பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.