திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வர்த்தக மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்துவைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “நோய்த் தொற்று பாதிப்புகளில் இருந்து பலரும் மீண்டு இன்று பல மருத்துவமனைகளிலும் படுக்கைகள் காலியாக இருக்கும் நிலையை, பல இடங்களிலும் பார்க்கிறோம்.
30,000 படுக்கைகள் காலியாக இருக்கும் இந்தநிலை என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது. படுக்கைகள் மட்டும் காலி என்பது அல்ல, தொற்றின் அளவும் குறைந்திருக்கிறது. நேற்றைய (04.06.2021) தொற்றின் எண்ணிக்கை 24,405. அதிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையானது 32,221. இதில் 8 அயிரம் பேர் தொற்றின் அளவைக் காட்டிலும் அதிகமாக குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இது அதிக நாட்களுக்குப் பின்னர் ஒரு நல்ல சூழலாக ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.