கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.முக. நிர்வாகி வைரமுத்து தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. மற்றும் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவரது வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்திருந்தார். பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு இன்று தற்பொழுது மீண்டும் அந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் அரிமயா சுந்தரம் ஆஜராகி வாதத்தைத் தொடங்கியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் வைக்கப்பட்டுள்ள வாதத்தில், 'இரட்டை தலைமையில் ஆளுக்கொரு கருத்து இருக்கும். ஒரு முடிவு எடுக்க பல தடுமாற்றங்கள் இருக்கும். அதிமுகவின் இரட்டை தலைமை என்பது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை உருவாக்கியபோது என்ன வழிமுறை பின்பற்றப்பட்டதோ அதுவே தற்போது பின்பற்றப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை உருவாக்கியபோது தொண்டர்களிடம் செல்ல வேண்டும் என்று பன்னீர்செல்வம் கூறவில்லை. ஒன்றரை கோடி தொண்டர்கள் மூலம் தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; அதற்கான தேர்தல் நடத்த வேண்டும் என எதிர் தரப்பு கூறுகிறது. தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அனைத்து விவகாரங்களிலும் தொண்டர்களிடம்தான் செல்ல வேண்டி இருக்கும். அனைத்து விவகாரங்களுக்கும் தொண்டர்களிடம் செல்வது மிகவும் சிரமமான காரியம் என்பதால் பொதுக்குழுவுக்கு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டது. தொண்டர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில்தான் விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்கள் பொதுக்குழுவில் சேர்க்கப்படுகின்றனர். வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொண்டர்கள் கூட அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்' என வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.