
தமிழக முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற பொதுமக்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த பொழுது ஏற்பட்ட வாகன விபத்தில் 15-க்கும் மேற்பட்டவர்கள் காயத்துடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று கடலூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதே கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் 'பெற்றோரை கொண்டாடுவோம்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். முதல்வரை வரவேற்பதற்காக பழையபட்டினம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் டாடா ஏசி வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த நிலையில் மீண்டும் அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது கச்சிராயநத்தம் என்ற கிராமத்திற்கு அருகே கட்டுப்பாட்டை இழந்த டாடா ஏசி சாலையில் கவிழ்ந்தது. இதில் அதில் பயணித்த 15க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விபத்தில் சிக்கிய அனைவரும் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.