நிதி முறைகேடு தொடர்பான புகாரில் தக்ஷிண பாரத் இந்தி பிரசார சபாவின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. மதுரையில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அறிக்கை அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1964 ஆம் ஆண்டு தக்ஷிண பாரத் இந்தி பிரசார சபா என்ற கல்வி அமைப்பு பாராளுமன்ற சட்டத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. தென்னிந்தியாவில் இந்தி பேசத் தெரியாதவர்களுக்காக இந்தியை பயிற்றுவிக்கவும், இந்தியை பயிற்றுவிப்பவர்களுக்கு நிதி உதவி அளிக்கவும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பிற்கு தென் இந்தியாவில் நான்கு மண்டலங்கள், 14 கிளைகள் உள்ளன. இந்த அமைப்பிற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு வந்தது.
கடந்த 2004-2005 நிதியாண்டு முதல் 2016-2017 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசு கொடுத்த நிதியை இந்தியை வளர்க்க பயன்படுத்தாமல் ஆங்கிலவழிக்கல்வி உள்ளிட்டவற்றை முன்னேற்ற பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மதுரை மண்டலத்தில் சிபிஐ அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர். குறிப்பிட்ட நிதியாண்டில் மத்திய அரசு இந்த அமைப்பிற்கு கொடுத்த ரூ. 5.78 கோடி நிதியை தவறாக பயன்படுத்தி, வரவு செலவு தொடர்பாக போலி ஆவணங்களை சமர்ப்பித்து முறைகேடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி முறைகேடு புகாரில் தக்ஷிண பாரத் இந்தி பிரசார சபாவின் முன்னாள் தலைவர் நிரல் கோட்டி மற்றும் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.