கோவையில் இலவச மடிக்கணினி வழங்க கோரி மனு அளிக்க வந்த மாணவர்களுக்கு ஆதரவாக வந்த இந்திய மாணவர் சங்க நிர்வாகியை காவல்துறையினர் தரதரவென இழுத்து சென்று தாக்கி கைது செய்தனர்.
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இலவச மடிக்கணினி வழங்கக்கோரி, 100 க்கும் மேற்பட்ட அப்பள்ளி மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது மாணவர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ்ராஜா வந்தார். மாணவர்களிடம் தினேஷ் பேசிக்கொண்டிருக்கும் போது, பேச விடாமல் காவல்துறையினர் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து தினேஷினை காவல் துறையினர் தரதரவென இழுத்து சென்று தாக்கி கைது செய்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க மட்டுமே வந்ததாகவும், போராட்டம் நடத்த வரவில்லை எனவும் கூறிய தினேஷ்ராஜா, தன்னை காவல்துறை அடித்து கைது செய்திருப்பதாக தெரிவித்தார். மேலும் மாணவர்களுக்கு உடனடியாக இலவச மடிக்கணினி வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். இதையடுத்து மற்ற மாணவர்களை காவல்துறையினர் கலைந்து செல்ல செய்தனர்.