ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஸ்ரீ வைஷ்ணவ தர்ம சம்ரக்ஷண சங்கத்தின் தலைவர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் தாக்கல் செய்த பொது நல மனுவில், தமிழகத்தில் காற்று மற்றும் நீர் மாசுபாடுகள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக நிலத்தடி நீர் பாதிக்கப்படும் வகையில் குடிசை பகுதிகளில் மாசுபாடு அதிகரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஏ.செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபாலன் ஆஜராகி, காற்று மற்றும் நீர் மாசு பாடுகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட துறைகளில் யார் யாருக்கு கோரிக்கை மனு அளித்தார் என்ற விவரங்களை குறிப்பிடாமல் வழக்கு தொடர்ந்துள்ளார் என தெரிவித்தார்.
அப்போது அதிருப்தி அடைந்த நீதிபதிகள், மனு அளித்தாலும், இல்லாவிட்டாலும் மாசிலிருந்து மக்களை பாதுகாப்பது அரசின் கடமை இல்லையா? என கேள்வி எழுப்பினார். காற்று மற்றும் நீர் மாசுபாட்டில் இருந்து மக்களை பாதுகாப்பது அரசின் பணிதான் என குறிப்பிட்டனர்.
மேலும், தற்போது எங்கு தான் மாசு இல்லாமல் இருக்கிறது? நீதிபதிகளின் அறைகளை திறந்து வைக்க கூட முடியாத அளவிற்கு மாசு எல்லா இடத்திலும் தான் உள்ளது? இவ்வாறு காற்று மாசுபாடுகள் உள்ளதால் நுரையீரல் சம்மந்தமான நோய்கள் வருவதாகவும், குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதனையடுத்து வழக்கு தொடர்பாக மத்திய மாநில அரசுகள், தமிழ்நாடுமாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.