கடலூர் மாவட்டம், மங்களுர் அருகிலுள்ள கச்சிமயிலூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(50). இவர், சில ஆண்டுகளாக ராமநத்தம் பகுதியில் மருந்துக் கடை (மெடிக்கல் ஷாப்) வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அடிக்கடி மருந்து மாத்திரைகள் வாங்குவதற்காக வந்து சென்றுள்ளார் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள மேட்டுப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன். இவரது மனைவி கவி (27 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு ஐந்து மற்றும் மூன்று வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் வேல்முருகன் மனைவி கவி மீண்டும் கர்ப்பவதியாகியுள்ளார். ஆனால் தங்களுக்கு மூன்றாவது குழந்தை வேண்டாம் என்று வேல்முருகன், கவி இருவரும் முடிவு செய்து, ராமநத்தம் முருகன் மெடிக்கல் ஷாப்புக்கு கணவன் மனைவி இருவரும் வந்துள்ளனர். அவரிடம் கவிக்கு கருக்கலைப்பு செய்வது சம்பந்தமாக வேல்முருகன் ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது மெடிக்கல் ஷாப் முருகன் கவிக்கு தானே கருக்கலைப்பு செய்வதாக கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து முருகன் தனது மருந்துக்கடையில் வைத்து கவிக்கு மாத்திரைகள் கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளார்.
இதில் கவி மயக்கம் அடைந்து ஒரு கட்டத்திற்கு மேல், காலையிலிருந்து மாலை வரை சுய நினைவு திரும்பாமல் மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளார். இதைக் கண்டு பதறிப்போன முருகன், வேல்முருகனை தன்னுடன் அழைத்துக்கொண்டு ஒரு காரில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கவியை கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
கவியை மருத்துவமனைக்குள் படுக்க வைத்து வேல்முருகன், முருகனை பார்க்க வெளியே வந்தபோது முருகன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கவிக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் மெடிக்கல் முருகன் மீது வழக்கு பதிவு செய்து முருகனை தேடிச் சென்றனர். அவர் அதற்குள் தலைமறைவாகிவிட்டார். போலீசாரின் விசாரணையில் முருகன் மெடிக்கல் ஷாப் நடத்துவதற்கு உரிய படிப்பை படிக்காமலும், அதற்கான உரிமம் இல்லாமலும் மெடிக்கல் ஷாப் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் இதற்கு முன் அவர் ஜவுளிக்கடை நடத்தி வந்ததும், அதை மூடிவிட்டு மெடிக்கல் ஷாப் வியாபாரத்தை ஆரம்பித்ததும் தெரியவந்துள்ளது. தற்போது போலீஸார் முருகனை தீவிரமாக தேடிவருகின்றனர்.