தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. மேலும், திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் சேதமடைந்தன. அதேபோல் வடகிழக்கு பருவ மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துள்ளது.
அதன் ஒருபகுதியாக, திருச்சி முக்கொம்பு மேலணைக்கு தற்போதைய நிலவரப்படி மொத்தம் 57,771 கனஅடி நீர் வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் 35,210 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் 17,552 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வடக்கு கொள்ளிடத்தில் 5,009 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாசன வாய்க்கால்களான அய்யன் வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால், பெருவனை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.