திருச்சி மாவட்டம் ஓலையூரில் உள்ள முடிகண்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவி ஜான்சிதிவ்யா கணவர் சகாயராஜ் அலுவலகத்தை பூட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார். இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு இருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நாம் உள்ளிருப்பு போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் ஊராட்சிமன்ற தலைவியிடம் பேசினோம், அவர் கூறுகையில்.
இது பொது தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த முறை நான் வெற்றிபெற்றுயிருக்கிறேன். காரணம் இங்கே இருக்கும் சில குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் தொடர்ச்சியான அராஜாகத்தினால் மக்கள் பயந்து என்னை தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.
தற்போது திருமலைசமுத்திரம் குளத்தில் இருந்து ரிங் ரோட்டிற்கு கலெக்டர் அனுமதியுடன் மணல் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது தீடீர் என 15 டிராக்டர் வண்டியை யாரோ தடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு தகவல் வர நானும் என் கணவரும் தலையாரி மணிகண்டன் ஆகியோர் உடன் அந்த இடத்திற்கு சென்றோம்.
அங்கே அதிமுகவின் முக்கிய பிரமுகர் மூக்கன் - மற்றும் அவருடைய மருமகன் கஸ்துரி கருப்பையா இன்னும் சிலர் லாரியை மறித்து பணம் வேண்டும், கோவிலுக்கு பணம் வேண்டும் என்று பிரச்சனை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது நான் சென்று இது கலெக்டர் அனுமதியுடன் தான் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எதுவும் பிரச்சனை செய்ய வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அந்த மூக்கன் என்னை அடித்து கீழே தள்ளிவிட்டு நீ யாரு இதை கேட்க என்று சொல்லி என்னை தாக்க ஆரம்பித்து என் கணவரை தாக்கிவிட்டார்.
இப்போது தான் ஊராட்சிமன்ற தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் பெயரில் கேட்க போன என்னை தாக்கியது உயிருக்கு உத்தரவாதம் கேட்டும், இந்த ஊருக்கு பாதுகாப்பு கேட்டும் தான் தற்போது நான் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறேன்.
டி.எஸ்.பி. வந்து விசாரித்து சென்றார்கள் புகார் கொடுக்க சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் கலெக்டரிடம் நேரடியாக புகார் கொடுத்த பின்பு தான் இந்த போராட்டத்தை கைவிடுவோம் என்று சொன்னார்.
தேர்ந்தெடுக்கப்பட்டு சில நாட்களுக்குள்ளாகவே ஆளும்கட்சியினர் பிரச்சனை பண்ணியிருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.