
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2025 - 26 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று (04.05.2025) நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள நீட் தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வெழுதி வருகின்றனர்.
இந்தநிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நீட் தேர்வு இன்று மதியம் தொடங்கியது. சுமார் 1,200 மாணவ மாணவிகள் அந்த இரு தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதி வருகின்றனர். மதியம் 1:30 மணிக்குள் தேர்வு எழுத வந்த மாணவர்கள் அனைவரும் பயோமெட்ரிக் அடையாளத்தை பதிவு செய்துவிட்டு தேர்வு அறைக்கு செல்ல வேண்டிய நிலையில் 1:40 மணி ஆகியும் மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்தனர். அதேபோல் தேர்வு மையத்தில் சில அறைகளில் கடிகாரம் இல்லாததும் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரே ஒரு பயோமெட்ரிக் கருவி மட்டுமே இருந்த நிலையில் சில மாணவர்கள் அவசரத்தில் பயோமெட்ரிக் பதிவு செய்யாமலே உள்ளே சென்று தேர்வு எழுத சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பயோமெட்ரிக் வைக்காத தங்களுடைய குழந்தைகள் தேர்ச்சி அடைவார்களா இல்லையா என்ற அச்சத்தில் உள்ள பெற்றோர்கள் சரியான ஏற்பாடுகளை செய்து கொடுக்கவில்லை என திருச்செங்கோடு-சங்ககிரி சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.